ம திமு க நிர்வாக குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம், இன்று 13.05.2026 புதன் கிழமை காலை 10 மணிக்குகழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில், சென்னை, எழும்பூரில் உள்ள தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது.பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார்.
கூட்டத்தில் கழகப் பொருளார் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் ஏ.கே.மணி, டாக்டர் ரொஹையா மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ச.ஜோசப் விஜய்க்கு மறுமலர்ச்சி தி.மு.க. வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், மதச்சார்பின்மை, சமூக நீதி, கூட்டாட்சிக் கொள்கை, போதை கலாச்சார ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு இவற்றைப் பாதுகாத்து, இந்த நெறிகளில் இருந்து இம்மி அளவும் பிசகாமல் தமிழக அரசின் ஆட்சியை நடத்திட வேண்டும்
*தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுகின்ற பணியில் தற்போது வைகோ வும், கழகத் தோழர்களும், வேளாண் பெருங்குடி மக்களும் ஈடுபடுவது என்றும் ஜூன் 1 ஆம் தேதி கலிங்கப்பட்டி ஊராட்சியில் தொடங்குவது என்றும், பின்னர் ஜூன் 2 தூத்துக்குடி மாவட்டத்திலும், ஜூன் 4 ஆம் தேதி தஞ்சை வடக்கு மாவட்டத்திலும், ஜூன் 8 ஆம் தேதி செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்திலும், ஜூன் 10 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலும், ஜூன் 11 ஆம் தேதி விருதுநகர் மேற்கு மாவட்டத்திலும், ஜூன் 12ஆம் தேதி மதுரை வடக்கு மாவட்டத்திலும், ஜூன் 13 ஆம் தேதி மதுரை மாநகர் மாவட்டம், ஜூன் 19 ஆம் தேதி விருதுநகர் மத்திய மாவட்டத்திலும், 21 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திலும், ஜூன் 30 ஆம் தேதி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்திலும், ஜூலை 2 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலும், 06 ஆம் தேதி திருப்பூர் வடக்கு மாவட்டத்திலும், 7 ஆம் தேதி கோவை வடக்கு மாவட்டத்திலும், 11 ஆம் தேதி கடலூர் கிழக்கு மாவட்டத்திலும் இப்பணியில் ஈடுபடுவது என்றும், மீதம் உள்ள மாவட்டங்களுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
*தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் வட்டம், சிவகிரி வட்டம், திருவேங்கடம் வட்டம் பகுதிகளில் உள்ள 25 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் உள்ளாறு அணைக்கட்டுத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்திகிறோம்

* மேற்கு மலைத் தொடர் சரிவுகளிலிருந்து கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப் பன்றிகள் தென்காசி, நெல்லை மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் உள்ள விவசாயப் பயிர்களை நாசப்படுத்தி அழிக்கும் பெருந் தீமையிலிருந்து விவசாய நிலத்தைப் பாதுகாக்கும் வகையில் காட்டு விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றிகளை நீக்கும் முடிவினை மத்திய அரசு செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வலியுறுத்தியும்.
*.தியாகச் சுடர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழக – கேரள எல்லையில் அமைந்த செண்பகவல்லி தடுப்பணை சற்று பழுது பட்டதால் அணையை மீண்டும் கட்டுவதற்கு வை.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த ரிட் மனு தற்போது நிலுவையில் இருக்கிறது.செண்பகவல்லி தடுப்பணையை மீண்டும் கட்டுவதற்கு கேரள அரசை தமிழக அரசு வலியுறுத்தவும். அதற்கான செலவுத் தொகையை தமிழக அரசு ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்திஜூன் 5 ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று வாசுதேவநல்லூரில் பெருமளவில் விவசாயிகள் பங்கேற்கும் உண்ணாநிலை அறப்போரை கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
*புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள விஜய் தலைமையிலான அரசு, ஒன்றிய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடக் கூடாது; மும்மொழிக் கல்வித் கொள்கையை ஏற்கக் கூடாது என்று மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







