வணிகர்களை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு சட்டம்; கோவில்பட்டியில் நடந்த சுதேசி மாநாட்டில் தீர்மானம்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் 43-வது வணிகர் தின விழாவை முன்னிட்டு சுதேசி 2.0 லட்சிய மாநாடு கோவில்பட்டியில் நேற்று மாலை நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணை செயலாளர் சுபாஷ்ராஜா சுதேசி ஜோதியை தொடங்கி வைத்தார்.
மாநில துணை பொதுச் செயலாளர் வி.சி.கதிரவன், மாநில அமைப்பு இணைச் செயலாளர் வெள்ளத்துரை, வடக்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன், மாவட்ட பொருளாளர் விக்னேஷ் ஆகியோர் சமாதான புறாக்களை பறக்கவிட்டனர்.

மாநில மகளிரணி தலைவர் பாக்கியலட்சுமி சுதேசி ஜோதியை ஏற்றினார். மாநில தலைவர் முத்துக்குமார், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பிரகாஷ், கோவை மண்டல தலைவர் சுதர்சன், மாநில பொதுச் செயலாளர் கே.சி.ராஜா, மாநில பொருளாளர் பொன்னுச்சாமி, மாநில செயலாளர் நாஞ்சில் குமார் மற்றும் மண்டல தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் பேசினர். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தமிழரசன் நன்றி கூறினார்.
மாநாட்டில், நிறைவேற்றப்பட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
*சுதேசி கொள்கையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
*ஆன்லைன், அந்நிய நிறுவன கடைகள், கார்பரேட் கடைகள் போன்றவற்றுக்கு மத்திய அரசு சிறப்பு வரி திருத்தம் கொண்டு வந்து, அனைத்து கடைகளிலும் ஒரே பொருள் ஒரே விலை என்ற அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
*விநியோகஸ்தர்கள் கடைகளுக்கு தரும் பொருட்களின் விலையை விட குறைந்த விலைக்கு ஆன்லைன், கார்பரேட் நிறுவனங்கள் விற்கக்கூடாது என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும்.

*வணிகர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வணிகர்களை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
*கடைகளுக்கான மின் கட்டணம், தொழில்வரி போன்றவற்றை மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும். மின் கட்டண அளவீட்டை மாதம் ஒருமுறை என்று மாற்ற வேண்டும்.
*கடைகளுக்கான வாடகை கட்டணத்தை அரசு நேரடியாக கண்காணிக்கும் முறை வேண்டும்.
*கோவை மண்டலத்தை தொழில் மண்டலமாக அறிவிக்க வேண்டும். சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு போர்கால அடிப்படையில் தீர்வு கண்டு, உள்ளூர் ஓட்டல் மற்றும் பேக்கரி வணிகர்களை பாதுகாக்க வேண்டும்.
*வணிகர் நல வாரியத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகர்களையும் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







