ம.பி. படகுவிபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பெண்கள் பலி ; 3 பேர் கதி என்ன?

மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் அருகே நர்மதா ஆற்றில் அமைந்துள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி மாலை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் பலர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். சிலரைத் தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரின் மரணம் குறித்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

முதற்கட்ட தகவலின்படி, திடீர் காற்று, பலத்த மழை மற்றும் பெரிய அலைகள் காரணமாகப் படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகத் தெரிய வருகிறது.
தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலா சென்றிருந்த எனது திருச்சி தொகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இந்த விபத்தில் சிக்கியதாக வந்த தகவலை அறிந்ததும், ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் ராகவேந்திரா சிங்கை தொடர்பு கொண்டு விபத்து குறித்த விரிவான தகவல்களைப் பெற்றேன். நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் மற்றும் இறந்தவர்கள் குறித்த விவரங்களையும் அறிந்துகொண்டேன்.
அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர். காமராஜ் மனைவி திருச்சி நாவல்பட்டு கே.கார்குழலி (வயது 36) மற்றும் அவரது சகோதரரின் மனைவி திருப்பூர் தாராபுரம் பி. செளபாக்கியா (வயது 42) ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
ஆர்.காமராஜ் (வயது 38), அவரது மகன் கே/ தமிழ்வேந்தன் (வயது 6), செளபாக்கியா மகன் பி. மயூரன் (வயது 8) ஆகிய மூவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது,, புவிதரன் (வயது 10) மற்றும் இனியா (வயது 12) ஆகிய இரு குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நவீன உபகரணங்கள் கொண்ட ஹெலிகாப்டர் உதவியுடன் ராணுவத்தினர், மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, உள்ளூர் மீனவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகவும், இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்ததாகவும், அம்மீட்புபணிகள் தொய்வன்றி தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணங்களை உடனடியாக விசாரித்து, மனிதத் தவறுகள் இருப்பின் அதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.
அதோடு நில்லாமல், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் அனைத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக ஆய்வு செய்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் போதாத இடங்களை உடனடியாக மூடுவதற்கும், அனைத்து மாநில அரசுகளும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காமராஜ் மூத்த சகோதரர். சக்தி என்பவரை தொடர்பு கொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டேன். இறந்த இருவரின் உடல்களையும் தனித்தனி சிறப்பு விமானத்தில் திருச்சிக்கு கொண்டு வர ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் ராகவேந்திரா சிங்கை கேட்டுக்கொண்டதையும், திருச்சி வந்தவுடன் அவ்வுடல்களை நாவல்பட்டு மற்றும் தாராபுரத்திற்கு கொண்டு செல்ல இரு அவசர ஊர்திகளை ஏற்பாடு செய்யுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் . வே. சரவணனை கேட்டுக் கொண்டதையும் அவரிடம் தெரிவித்தேன்.
மத்தியப் பிரதேசத்தில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த . இளையராஜா IAS எனக்கு இப்பணியில் உதவி செய்து வருகிறார். அவருக்கும், ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர். ராகவேந்திரா சிங், திருச்சி மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு துரை வைகோ எம்.பி.கூறி உள்ளார்.







