படகோட்டிகள் அலட்சியம்: மத்திய பிரதேச படகு விபத்து பற்றி விசாரணை

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் நர்மதா ஆற்றின் மீது பார்கி அணை கட்டப்பட்டு உள்ளது. படகு சவாரி செய்வதற்காக, சுற்றுலா பயணிகள் சிலர் கடந்த ஏப்ரல் 30-ந்தேதி இந்த அணைக்கு சென்றனர்.
அவர்கள் மத்திய பிரதேச சுற்றுலா துறை சார்பில் இயக்கப்பட்ட படகில், அணையில் பயணம் செய்தனர். அப்போது பலத்த காற்று வீசியதில், படகு கவிழ்ந்தது. இதில், படகில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட பலரும் நீரில் மூழ்கினர். இதில் , 18 பேர் மீட்கப்பட்டனர்.

விபத்தில் சிக்கி 4 பேர் பலியானார்கள். இந்த பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்து உள்ளது. விபத்தில் சிக்கிய பலரை காணவில்லை. அவர்களை கண்டறியும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில், படகு விபத்தில் சிக்கியது பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. படகில் 30 சுற்றுலா பயணிகள் இருந்துள்ளனர். அளவுக்கு அதிகமாக கூடுதலான பயணிகள் படகில் ஏற்றப்பட்டு உள்ளனர் என தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
படகில் பயணித்த சுற்றுலா பயணிகளுக்கு உயிர் காக்கும் கவச உடைகள் வழங்கப்படவில்லை. திடீரென ஏற்பட்ட புயல் மற்றும் பலத்த காற்று வீச்சு ஆகியவற்றால் படகு விபத்தில் சிக்கி தள்ளாடியது. அப்போதும், படகில் இருந்தவர்கள் உஷாராகவில்லை.
படகை திரும்ப வரும்படி விடுத்த எச்சரிக்கையை படகோட்டிகள் அலட்சியப்படுத்தி உள்ளனர். படகில் நீர் புகுந்து ஆபத்து உணரப்பட்டபோதே, உயிர் காக்கும் கவச உடைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையையும் புறக்கணித்து உள்ளனர்

படகு விபத்தில் சிக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் கள் படகில் சவாரி செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஆனால், அதில் பயணித்தவர்கள் யாரும் உயிர் காக்கும் கவச உடைகளை அணிந்திருக்கவில்லை
இந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் அரசு சார்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில், பெரிய அளவிலான அலட்சியம் உள்ளிட்ட விசயங்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.







