வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் வலியுறுத்தல்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் வாக்காளர்கள், தங்களது சொந்த ஊர்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் செல்வதற்குப் போதுமான பேருந்து வசதிகள் அல்லது பொதுப் போக்குவரத்து வசதிகள் இன்றித் தவித்து வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் உரிய நேரத்தில் வாக்குச்சாவடிக்குச் சென்றடைய ஏதுவாக, கூடுதல் போக்குவரத்து வசதிகளைச் செய்ய மாநிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளுக்குத் தேர்தல் ஆணையம் உடனடியாக உத்தரவிட வேண்டும்.”
வாக்காளர்கள் தங்களது வாக்கினைச் செலுத்த வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
அதே வேளையில், வாக்குப்பதிவு செயல்முறை மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனைச் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடித் தேர்தல் மேற்பார்வை அதிகாரிகள் ஆய்வு செய்து, வாக்குப்பதிவை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ள வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு ஏதுவாக, வாக்குப்பதிவு நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டிக்க வேண்டும்.

அதாவது, இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற வழிவகை செய்ய வேண்டும். அந்தத் திருத்தப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்கு வரும் ஒவ்வொரு வாக்காளரையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்”
இவ்வாறு அந்தக் கடிதத்தில் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.







