தூத்துக்குடி பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து
Oplus_16908288
.தூத்துக்குடி சிப்காட் தொழில்பேட்டை வளாகப் பகுதியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்குச் சொந்தமான பஞ்சு கிடங்கு ஒன்று உள்ளது.
இங்கு வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக ஏராளமான பஞ்சு மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று சனிக்கிழமை பிற்பகலில், கிடங்கின் ஒரு பகுதியில் திடீரென தீப் பிடித்து எரியத் தொடங்கியது. பஞ்சு என்பதால் தீ மளமளவென கிடங்கு முழுவதும் பரவி, கரும்புகை வானை முட்டியது.

இது குறித்துத் தகவல் அறிந்த மாவட்ட அலுவலர் கருணாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மூன்று தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், நீண்ட நேரம் போராடித் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, உள்ளே ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாகக் கிடங்கின் ஒரு பக்கச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் மற்றும் இதர தளவாடப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின.
சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








