ராகுல் காந்தி 20-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகை: குளச்சல்,நாங்குநேரி, ஸ்ரீ வைகுண்டம் கூட்டங்களில் பேசுகிறார்
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இன்று சனிக்கிழமை சென்னை அருகே பொன்னேரியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இதைத் தொடர்ந்து 20ந் தேதி (திங்கட்கிழமை) தமிழகத்தில் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் ஒரே நாளில் 3 பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றுகிறார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 20 ந் தேதி காலை 10:45 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தனது பயணத்தைத் தொடங்குகிறார்
குளச்சல் (கன்னியாகுமரி): முற்பகல் 11:30 மணிக்கு குளச்சலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
நாங்குநேரி (திருநெல்வேலி): பிற்பகல் 1 மணிக்கு நாங்குநேரி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.
ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி): பிற்பகல் 2:25 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
மாலை 3:50 மணிக்குத் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் அவர் மீண்டும் டெல்லிக்குத் திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் வருகையை ஒட்டி தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி விமான நிலைய பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.







