நாகர்கோவிலில் வாக்கு சேகரிப்பு : பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி ‘ரோடு ஷோ’
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாகர்கோவிலில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் பிரம்மாண்ட வாகன பேரணி நடைபெற்றது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் வந்து சேர்ந்தார்.
அங்கு அவருக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி சாலை வரை சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்திற்குத் திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.
இந்தப் பேரணியில் பிரதமருடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

ஒரே வாகனத்தில் இரு பெரும் தலைவர்களும் இணைந்து நின்றவாறு பொதுமக்களைப் பார்த்து கையசைத்தபோது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் “வாழ்க வாழ்க” என முழக்கமிட்டு மலர் மாரி தூவினர்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு குமரி மாவட்டம் முழுவதும் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. பேரணி நடைபெற்ற பாதையெங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.







