தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தென் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயல்; மத்திய அரசுக்கு விஜய் கண்டனம்
தவெக தலைவர் விஜய் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
“மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தற்போதுள்ள 543-லிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ‘அரசியலமைப்பு (131-ஆவது திருத்தம்) மசோதா, 2026’ மூலம், நாடாளுமன்ற அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. ஆனால், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டால், தென் மாநிலங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் இடையிலான பிரதிநிதித்துவ விகிதாசார வேறுபாடு வெகுவாக அதிகரிக்கும். இதனால் மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுவதில் தென் மாநிலங்களின் செல்வாக்கு குறையும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும் சூழல் உருவாகும். இது மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கையாகும்.
மத்திய அரசின் அறிவிப்புகளை ஆண்டாண்டு காலமாக முறையாகப் பின்பற்றி வரும் ஒரு மாநிலத்திற்குத் ‘தண்டனை’யையும், அதைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு ‘வெகுமதி’யையும் அளிப்பது போல் இந்த மசோதா அமைந்துள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.
நிதிப் பகிர்வில் ஏற்படப்போகும் பாதிப்பு: நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மாறும்போது, அது மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே தமிழகம் போன்ற மாநிலங்கள் நிதிப் பகிர்வில் உரிய பங்கைப் பெறாமல் இழப்புகளைச் சந்தித்து வருகின்றன.
பட்ஜெட் தாக்கலின் போதும் தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதி மற்றும் திட்டங்கள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தமிழகத்திற்கான நிதி மேலும் குறையவே வாய்ப்புள்ளது.

தென் மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குப் பல்வேறு வகைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ‘அரசியலமைப்பு (131-ஆவது திருத்தம்) மசோதா, 2026’-ஐ நிறைவேற்றும் முயற்சியைக் மத்திய அரசு கைவிட வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள பழைய முறையே தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு விஜய் குறிப்பிட்டுள்ளார்.







