திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வலிமையானது; தூத்துக்குடியில் செல்வபெருந்தகை பேட்டி
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்,. விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அதிமுக – பாஜக கூட்டணி என்பது இயற்கைக்கு மாறானது என நாங்கள் ஆரம்பம் முதலே கூறி வருகிறோம். மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்தக் கூட்டணி ஒரு ‘மூழ்கும் கப்பல்’. அதில் தெரியாமல் ஏறியுள்ள சிலரும் இப்போது இறங்குவதற்கு வாய்ப்புள்ளது.
திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வலிமையானது; இது தமிழக மக்களைத் தலைநிமிரச் செய்யும் கூட்டணி. ஆனால், என்.டி.ஏ கூட்டணி என்பது தமிழக மக்களைத் தலைகுனிய வைக்கும் கூட்டணியாகும். தமிழக உரிமைகளை மோடியும், அமித்ஷாவும் எப்போதெல்லாம் பறிக்க நினைக்கிறார்களோ, அங்கெல்லாம் கையொப்பமிட்டுத் தமிழகத்தைத் தலைகுனிய வைத்தவர்கள் அதிமுகவினர். தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சி இருக்குமா அல்லது அந்தக் கட்சியை பாஜக விழுங்குமா என்பதுதான் இப்போதுள்ள பெரிய கேள்வி.

பீகாரில் நிதிஷ் குமாரைப் பதவியிலிருந்து இறக்கிவிட்டு, அவரை மாநிலங்களவைக்கு அனுப்ப பாஜக திட்டமிட்டுள்ளது. அங்கு பாஜகவைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்க முயற்சி நடக்கிறது. அதேபோன்று, தமிழகத்தில் அதிமுகவைக் கபளீகரம் செய்வதற்கான திட்டத்தை மோடியும், அமித்ஷாவும் வகுத்துள்ளனர். இதில் ஏமாந்து போன அதிமுக, எதற்காகத் தன் உரிமைகளைத் தாரைவார்க்கிறது என்று தெரியவில்லை.
டெல்லியில் உள்ள மத்திய அரசிடம் எல்லாவற்றையும் அடகு வைத்துவிட்டு, ‘தப்பித்தால் போதும்’ என்ற நோக்கில் அதிமுக அரசியல் செய்கிறது. 1996 தேர்தல் முடிவுகள் எப்படி இருந்ததோ, அதேபோன்ற ஒரு முடிவைத் தான் மக்கள் இந்தத் தேர்தலிலும் வழங்குவார்கள்.
காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால், அகில இந்திய தலைமையின் முடிவே இறுதியானது. தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலில் நாங்கள் எவ்விதக் குழப்பமுமின்றி இணக்கமாகச் செயல்பட்டு வருகிறோம். தேர்தல் தொகுதிகள் மற்றும் பிரச்சார பயணங்கள் குறித்துத் தற்போது ஆலோசித்து வருகிறோம்.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை அரசு சிறப்பாகக் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. பெண்கள் வாழ்வதற்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு என்று மத்திய அரசே சான்றிதழ் வழங்கியுள்ளது. ஜாதிய மோதல்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை
இவ்வாறு செல்வபெருந்தகை கூறினார்.
பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து நாங்குநேரி வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக காரில் புறப்பட்டுச் சென்றார்.







