சட்டசபையில் முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கூச்சல்-அமளி

தமிழக சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை). காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேசுகையில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக ஆபாச நதியாக, வன்ம நதியாக ஓடுகிறது. அரசியல் ரீதியாக கருத்துகளை பதிவுசெய்யலாம். பெண்களுக்கு எதிரான கருத்துகளை அனுமதிக்க மாட்டோம். பெண்களை பற்றி அவதூறாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும்.
இங்குள்ள ஒரு உறுப்பினர், எலும்பை உடைப்பேன் என்று பேசுகிறார். அவர் என்ன ஆர்த்தோ டாக்டரா? தி.மு.க.வுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவு வராது என ஒருவர் பேசுகிறார். இப்படி பேசியதால்தான், இவர்கள் எதிர்கட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பை கொஞ்சமாவது மதிக்க வேண்டும்.
கட்சி நிதி குறித்து தி.மு.க.வின் ஊழல் குறித்து அமலாக்கத்துறை கூறியுள்ளது. 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை கட்சி நிதி வாங்கியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அதன் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அந்த துறைக்கு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாகபயன்படுத்தியுள்ளார். எவ்வளவு பெரிய சாதனை. அதுதான் தி.மு.க.
டாஸ்மாக்கை கையில் வைத்திருந்த அமைச்சருடன் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இதில் சிக்கியுள்ளனர். செந்தில் பாலாஜியின் சகோதரர் குறித்தும் அமலாக்கத்துறை சொல்லியுள்ளது. பார்ட்டி பண்ட்(கட்சி நிதி) வாங்கியதில் முக்கிய நபர்கள் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அமலாக்கத்துறை கூறியுள்ளது

.
தி.மு.க. இருக்குமிடத்தில் ஊழல் இருக்காது என அவர்கள் கூறுகின்றனர். நான் கூறுகிறேன். தி.மு.க. இருக்குமிடத்தில் ஊழல்கள் இருக்கும். ஊழல்கள் இருக்குமிடத்தில் தி.மு.க. இருக்கும்.
ஆதாரம் வேண்டும் என்றீர்களே.. போதுமா.. 2 வகை உள்ளது. தவறு செய்து மாட்டிக்கொள்வதற்கள் ஒரு பக்கம். தவறு செய்து, செய்யாதபடி சரியாக செய்பவர்கள் இன்னொரு பக்கம். அதில் தி.மு.க. 2 வது பக்கம். ஊழல் என்று சொன்னாலே தி.மு.க.வினர் எழுந்திரிப்பார்கள். ஊழல் செய்யவில்லை என்று அவர்களால் கூற முடியுமா?
மிசாவை பார்த்தவர்கள், மிசாவை பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள். மிசாவை பற்றிய வரலாறு எனக்கும் தெரியும். சட்டம், ஒழுங்கு பற்றி பேசுவதற்கு முன் உங்கள் ஆட்சியில் நடந்ததை கண்ணாடியில் பார்ப்பது நல்லது.
அண்ணா, எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., விஜய். இயற்கையும், இறைவனும் நமது பக்கம்தான் இருப்பார்கள். அன்புக்கு முன்னாடி அவர்கள் தோற்பது உறுதி. நாற்காலிக்காக அதிகாரத்திற்காக நான் இங்கு வரவில்லை, மக்களுக்கு நல்லது செய்யவும், நன்றி கடன் செய்யவும் மட்டுமே வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்-அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் எழுந்து நின்று முதல்-அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு பேச அனுமதி வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. கடும் அமளிக்கு இடையே காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீதான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.

தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுத்து வந்த நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவர்களை கண்டித்தார். இது குறித்து அவர் கூறியதாவது;-
“முதல்-அமைச்சர் விஜய் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாரே, அவர் எப்போது பதில் சொல்வார் என்றெல்லாம் கேட்டார்கள். முதல்-அமைச்சரின் பதிலுரை திங்கட்கிழமை இருக்கிறது என்று சொன்னேன். அதன்படி முதல்-அமைச்சர் இன்று தனது பதிலுரையை வழங்கியபோது பல ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மக்கள் மன்றத்தின் முன்பாக முதல்-அமைச்சரின் பதிலுரை முழுமையாக நேரலை செய்யப்படும்போது, என்னுடைய அனுமதி இல்லாமல் போஸ்டர்களை கொண்டு வந்து இங்கே காட்டுவதும், குரல் கொடுப்பதும் சரியல்ல. உங்கள் நோக்கம் அவரது பேச்சு வெளியே போகாமல் தடுக்க வேண்டும் என்பதாக இருந்திருந்தால், அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. நீங்கள் அலுத்துப் போகும் வரை குரல் கொடுத்தீர்கள், ஆனால் முதல்-அமைச்சர் தனது பேச்சை முழுமையாக நிறைவு செய்துள்ளார்.
முதல்-அமைச்சர் எப்போது பேசுவார் என்று கேட்ட நீங்கள், அவர் பதிலளிக்கும்போது அமைதியாக கேட்டிருக்க வேண்டும். உங்கள் விளக்கத்தை நீங்கள் அளிப்பதற்கான வாய்ப்புகள் எல்லாம் இருந்தன. ஆனால் அந்த வாய்ப்புகளை நீங்கள் இழந்துவிட்டீர்கள். இந்த அவையில் முதல்-அமைச்சர் பேசும்போது ஆரம்பத்தில் இருந்து கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தியது தவறு. உங்கள் போஸ்டர்களை கொண்டு வந்து காட்டுகின்ற இடம் அல்ல இது. இதை வன்மையாக கண்டிக்கின்றேன். முதல்-அமைச்சரின் பதிலுரை நிறைவடைந்துவிட்டது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.







