முதலமைச்சருடன் சந்திப்பு: அதிமுக ஆட்சியில் 3 முறை முதல் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், திமுகவில் இணைந்தார்
Oplus_16908288
அ.தி.மு.க. ஆட்சியில் 3 முறை முதல்-அமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. பல சிக்கல்களை சந்தித்தது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் துணை முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். அதன்பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் அதிரடியாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், அய்யப்பன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்தனர்.
இதனையடுத்து அ.தி.மு.க.வை மீட்க சட்ட நடவடிக்கை எடுத்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜனதா ஆதரவுடன் சுயேச்சையாக களமிறங்கினார். ஓரளவு வாக்குகளை பெற்றிருந்தாலும் அவர் தோல்வி அடைந்தார்.

அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்கழகம் என்ற பெயரில் அமைப்பை நடத்தி வருகிறார். அவரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். பா.ஜனதாவும் கண்டுகொள்ளவில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியிலும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டை யன் த.வெ.க.விலும் சேர்ந்துவிட்டனர்.
எனவே ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதற்கிடையே அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் ஐக்கியமாகினர். மேலும் பண்ருட்டி ராமச்சந்திரன் தனிக்கட்சி தொடங்கி விட்டார். ஜே.சி.டி.பிரபாகர் த.வெ.க.வில் இணைந்துவிட்டார்.
இந்த நிலையில், பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ஓ.பன்னீசெல்வம் இன்று (பிப்ரவரி 27) திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அப்போது அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஓபன்னீர்செல்வத்துடன் அவரது மகன் ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் மற்றும் ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தனர்.
திமுகவில் இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் அவர் மீண்டும் போடி தொகுதியில் போட்டியடுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
திமுகவில் இணைந்ததும் சட்டசபைக்கு சென்று சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் ஓ.பன்னீர்செல்வம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.அவருடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. உசிலம்பட்டி அய்யப்பனும் பதவியை ராஜினாமா செய்தார்.
அதிமுக ஆட்சியில் 3 முறை முதல் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







