5 ஊராட்சி ஒன்றியங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கக் கோரி கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தென்னக மானாவாரி விவசாயிகள் சங்கத் தலைவர் பிரேம்குமார் தலைமையில், நிர்வாகிகள் சவுந்தரராஜன், செந்தில் குமார், விஜயகுமார், ஆதிமூலம், சந்திரசேகர், நாகராஜ், மாரியப்பன் மற்றும் விவசாயிகள் கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை திரண்டனர்,
கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட 5 ஊராட்சி ஒன்றிய பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து, அவர்கள், சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மணிகண்டனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில கூறி இருப்பதாவது:-
கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்கள் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதி ஆகியவற்றில் 2025-26-ம் ஆண்டு மிகவும் குறைந்த அளவே மழை பெய்துள்ளது. விவசாயத்துக்கு ஏற்ற மழை பெய்யாததால் , பயிர்கள் சேதமடைந்து கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, நடப்பு ஆண்டில் மக்காச்சோளம், பயறு வகைகள் பயிர் செய்த பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உளுந்து, பாசி பயிர்களை விதைத்த விவசாயிகளுக்கு சராசரியாக 2 குவிண்டால் அளவுக்குத்தான் மகசூல் கிடைத்துள்ளது.

அதேபோல், மக்காச்சோளப் பயிரிலும் விவசாயிகளுக்கு 10 முதல் 12 குவிண்டால் அளவுக்குத்தான் விளைச்சல் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், மிக குறைந்த விளைச்சல்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அதிகம் பெய்த ஒரு சில பகுதிகளை மட்டும் கணக்கில் கொண்டு, மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக பல கிராமங்களில், மிகவும் குறைந்த அளவு மழை மட்டுமே பெய்துள்ளது.
அதிலும் கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம், கருங்குளம் போன்ற பகுதிகளில் வழக்கத்தை விட மழையின் அளவு மிகவும் குறைவு. இந்த பகுதிகளில் உள்ள எந்த நீர்நிலைகளும் நிரம்பவே இல்லை. இதுவே மழை சரிவர செய்யவில்லை என்பதற்கு சான்று.
ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களால் மழைப்பொழிவு பதிவு செய்யப்படும். அதன் அடிப்படையில் மழைப்பொழிவை கணக்கீடு செய்து, இந்த 6 ஊரட்சி ஒன்றிய பகுதிகளையும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, விவசாயிகளுக்கு தக்க இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இது தொடர்பாக ஜனவரி 27-ம் தேதி முதல் பிப்ரவரி .7-ம் தேதி வரை கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடத்த உள்ளோம்,
இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.







