கவர்னர் பேசும்போது சட்டசபையில் நடந்தது என்ன? சபாநாயகர் அப்பாவு விளக்கம்
தமிழக சட்டசபையில் இன்று பேசத் தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். தொடர்ந்து. 4-வது ஆண்டாக அவர் வெளியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சட்டசபையில் சபாநாயகர் மு.அப்பாவு வாசித்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அரசின் நிறை குறைகளைப் பேசுவதற்கு கவர்னர் அரசியல்வாதி அல்ல. கவர்னர் மாளிகையை விட்டு வெளியேறி, ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டு அதையெல்லாம் பேசலாம். கவர்னர் அவருக்கு உரிய பணியை அவர் செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை இப்படி செய்வார்களா..?
தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவாக தேசிய கீதம் பாடப்படும். இந்த மரபு ஒருபோதும் மாற்றப்படாது. சபாநாயகர் பேசும் போது பேரவையில் மற்றவர்களின் மைக் அணைக்கப்படுவது வழக்கம்தான். தயவு செய்து உங்கள் கடமையை செய்யுங்கள் என்று மட்டும்தான் கவர்னரிடம் கூறினேன்.
அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை வாசிப்பது கவர்னரின் கடமை. ஜனநாயக கடமையை பின்பற்றி கவர்னருக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.







