உயர்மின் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளன்கோட்டை பஞ்சாயத்து சூரியமினிக்கன் கிராமத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.,
இதனால் தங்கள் விவசாய பணிகள் பாதிக்கப்படும் என்று கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று (ஜனவரி 13) கிராம மக்கள் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உயர் மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் கிராம மக்கள் அதனை ஏற்காமல் உயர் மின் கோபுரத்தில் ஏறி நின்று கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒரு உயர் மின் கோபுரத்தில் 4 பெண்கள் ஏறி நின்று கொண்டு கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதனால் அந்த பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி இன்று நிறுத்தி வைக்கப்பட்டது. கிராம மக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.







