முதலமைச்சருக்கு இருக்கக்கூடிய வேலைப்பளுவில், எடப்பாடி பழனிசாமியோடு எல்லாம் விவாதிக்க முடியாது; கனிமொழி எம்.பி. பதில்
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம். பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வசித்து வரும், வேலை செய்து வரும் மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான் 100 நாள் வேலைவாய்ப்பு என்று நாம் சொல்லக்கூடிய கிராமப்புற வேலை உறுதி திட்டம்.
இந்த திட்டம், பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு உரிய முறையில் உறுதி செய்யப்படவில்லை. அதிகபட்சமாக 40 நாட்கள் வேலை மட்டுமே வழங்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இன்று அந்த திட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பெயர் மாற்றம் மட்டுமல்லாமல், ஒரு மாநில அரசுக்கு எத்தனை பேருக்கு வேலை வழங்கலாம் என்ற உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. முழுமையாக ஊதியத்தை ஒன்றிய அரசு வழங்கிய நிலைமையிலிருந்து, தற்போது 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றிய அரசு நிர்ணயிக்க கூடிய நபர்களுக்கு எண்ணிக்கையில் தான் வந்து வேலை கொடுக்க முடியும். அதை தாண்டி வேலை கொடுக்கும் பொழுது, அந்த பளுவையும் மாநில அரசாங்கமே ஏற்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும், இந்த திட்டத்தை மெதுவாக முடக்குவதற்கும், தடுத்து நிறுத்துவதற்குமான முயற்சிகளாகவே பார்க்க முடிகிறது. இதன் காரணமாக, கிராமப்புறங்களில் வாழும் மக்களின் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவிலே பாதிக்கக்கூடிய ஒரு சூழலை நாடு முழுவதுமே இது உருவாகும்.
இவ்வாறு கனிமொழி கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மேடை ஏறி நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், கூறியதாவது:-
” ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் யார் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். உலகம் முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டி பெருமை பெற்றவர் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சருக்கு இருக்கக்கூடிய வேலைப்பளுவில், எடப்பாடி பழனிசாமியோடு எல்லாம் விவாதிக்க முடியாது,
கட்சியில எத்தனையோ பேர் இருக்கிறார்கள். யார் வேண்டுமானால் அவரோட விவாதிக்க தயாராக இருப்பார்கள், அவங்களோட விவாதிக்கட்டும். அதெல்லாம் தாண்டி, சில கேள்விகள் இருந்தால் முதலமைச்சர் நிச்சயமாக பதில் அளிப்பார்”
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.







