கனிமொழி எம். பி.யுடன் கீழடி அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்த வல்லநாடு மாதிரி பள்ளி மாணவர்கள்


கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி, தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம், வல்லநாடு மாதிரிப் பள்ளியில், மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கான கட்டணமில்லா AI பயிற்சித் திட்டத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி. தொடங்கி வைத்தார்.
அப்போது, மாணவ–மாணவிகள், இதுவரை ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அருங்காட்சியகங்களை பார்வையிடவில்லை; அங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்களின் அந்த கோரிக்கையை ஏற்று, (24/08/2025) அன்று மாவட்ட மாதிரி பள்ளிக்குச் சென்ற கனிமொழி கருணாநிதி எம்.பி, 4 பேருந்துகளில் 200 மாணவ – மாணவிகளை அழைத்துக் கொண்டு ஆதிச்சநல்லூர் சென்றார்.

தொடர்ந்து, ஆதிச்சநல்லூர் ‘பி’ சைட்டில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தையும், ‘சி’ சைட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ள தொல்லியல் பொருட்களையும், மாணவ–மாணவிகளுடன் இணைந்து கனிமொழி கருணாநிதி பார்வையிட்டார்.
அதேபோல், இன்று (27/12/2025) வல்லநாடு மாதிரிப் பள்ளியிலிருந்து 4 பேருந்துகளில் 200 மாணவர்களை, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி ஏற்பாட்டில் கீழடி அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்று காண்பித்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி, கீழடி அருங்காட்சியத்தைப் பார்க்க வேண்டும் என்று மாணவர்கள் நீண்ட நாட்களாகவே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதற்கான ஆர்வத்தையும் காட்டி இருந்தார்கள். அதனால், அந்த மாணவர்கள் அனைவரையும் அழைத்து, இன்று இந்த அருங்காட்சியத்தைப் பார்வையிடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது.
நம்முடைய தமிழ் மக்களின் வரலாறு என்ன? நம்முடைய நாகரிகம் என்ன? அதன் பெருமைகள் என்ன? ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எழுத்து வடிவம் கொண்ட ஒரு மொழி, ஒரு பாரம்பரியத்திலிருந்து நாம் வந்திருக்கிறோம் என்பதை, நம்முடைய பிள்ளைகள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த அருங்காட்சியகம் ஒரு அரிய வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறது. இந்த வாய்ப்பை குழந்தைகளுக்கு உருவாக்கித் தந்த முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக மகளிர் தொண்டர் அணி இணைச்செயலாளர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







