எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சந்திப்பு

தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திற்கு சென்ற பியூஷ் கோயல் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக தமிழ்நாடு பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் அர்ஜுன்ராம் மேக்வால் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டம் முடிந்தவுடன் பியூஸ் கோயல், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான பூர்வாங்க பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் தேர்தல் பொறுப்பு குழுவினர் மற்றும் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சென்று இருந்தனர்,
இந்த சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்

கூட்டணியை பலப்படுத்துவது, தொகுதிப் பங்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் பியூஷ் கோயல் பேசினார். மேலும் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை தேசிய கூட்டணிக்குள் கொண்டு வருவது பற்றியும், , கடந்த காலங்களில் கூட்டணிகளில் இருந்த கட்சிகளை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வருவது பற்றி பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன,
அதிமுகவிடம் 30-40-க்கும் மேற்பட்ட இடங்களை கேட்டு பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்,. தங்களுடன் வரும் சிறு கட்சிகளுக்கும் சேர்த்து பாஜக சுமார் 50 தொகுதிகள் வரை கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை..







