செயலாளர் பதவி வழங்காததால் விரக்தி: விஜய் காரை மறித்த தூத்துக்குடி தவெக பெண் நிர்வாகி-பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
இதனால் அதிருப்தி அடைந்த தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக இருந்த அஜிதா ஆக்னல் என்ற பெண் நிர்வாகி, தனது ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகத்துக்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து மிகவும் ஆர்வத்துடன் கட்சி பணியாற்றி வந்த அஜிதா ஆக்னல் பல்வேறு கூட்டங்கள் நடத்தி இருக்கிறார். இரண்டு மாநாட்டுக்கு தூத்துக்குடியில் இருந்து ஆதரவாளர்களை வேன்களில் அழைத்து சென்று இருக்கிறார்.
இப்படியாக பல்வேறு வகைகளில் தீவிர கட்சி பணியாற்றி வந்த அஜிதா ஆக்னல் தனக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை என்பதை அறிந்து வேதனை அடைந்தார்.
இதனால் விஜயை சந்திக்க அஜிதா ஆக்னல் கண்ணீருடன் பனையூர் அலுவலக வளாகத்தில் காத்திருந்தார்.ஆனால், அலுவலக பாதுகாப்பு ஊழியர்கள் அவரை அனுமதிக்காமல் வெளியிலேயே தடுத்து நிறுத்தினர்.

அலுவலகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், அஜிதாவும் அவரது ஆதரவாளர்களும் வளாகத்தில் தொடர்ந்து காத்திருந்தனர். அவருடன் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் ஆதரவாளர்களுடன் வந்திருந்ததால் அலுவலகத்தைச் சுற்றி பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே தவெகவில் 120 மாவட்ட மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பொறுப்புகள் இன்று அறிவிக்கப்படவுள்ளன.
இந்தநிலையில், சென்னை பனையூரில் தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்த விஜயின் காரை மறித்து அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்தனர். அஜிதா தனது ஆதரவாளர்களுடன் காரை மறித்தபோது நிற்காமல் வேகமாகச் கார் சென்றது.
முற்றுகையில் ஈடுபட்டதால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.







