திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம்; கனிமொழி எம்.பி., தலைமையில் நடந்தது

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது,.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவின் முதல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (22/10/2025) நடைபெற்றது. கனிமொழி எம்.பி.தலைமையில் இக்கூட்டம் நடந்தது.

இக்குழுவில் இடம் பெற்றுள்ள திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், திமுக சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா முன்னாள் எம்.பி., திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், திமுக சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெறும் கூட்டங்களின் போது விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். இறுதியில் திமுக தலைவரும் முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும்.







