எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதியில் காட்டுப்பன்றிகளால் 200 ஏக்கர் மக்காச்சோளம் பயிர்கள் நாசம்; மானாவாரி விவசாயிகள் கண்ணீர்
விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் வேளாண் வட்டாரங்களில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, பாசி, சோளம், கம்பு, வெங்காயம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் மானாவாரி நிலத்தில் பயிர் செய்து வருகின்றனர்.
இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக பன்றிகள், மான்கள் தொல்லையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தாண்டும் பன்றிகள் அட்டகாசம் ஆரம்பித்துவிட்டன. அதாவது, இன்று (3.12.25) காலை விளாத்திகுளம் தாலுகா, சிவஞானபுரம் அருகே கே.குமரெட்டையாபுரம் ( கரையான்பட்டி ) கிராமத்தில் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலான மக்காசோளம் பயிர்கள் பன்றிகளால் சேதப்படுத்தப்பட்டிருந்தனவாம்.

இது போன்று மானாவாரி நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை பன்றிகள் தின்று அழித்து வருவதால், முறையாக மகசூல் எடுக்க முடியாமல் நஷ்டமடைந்து வருகிறோம். காட்டுப்பன்றிகள் அட்டகாசம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
வேளாண்மை துறை, வனத்துறை அதிகாரிகள் தொடங்கி மாவட்ட கலெக்டர் வரை பலமுறை புகார் அளித்தும் தற்போது வரை பன்றிகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது இப்பகுதி விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது..

நிலத்தில் இறங்கி வேலை செய்து பன்றிகளால் காயப்படும் விவசாயிகளின் காயத்துக்கு மருந்து செலவிற்கு கூட இந்த நிலத்தில் விளைந்த பயிர்கள் விலைக்கு போகாது என்பது வேதனைக்குரியது. இவ்வளவு இன்னல்களிலும் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம் என விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்..







