மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இடத்தை நில அளவை செய்து தர வலியுறுத்தி கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இடத்தை நில அளவை செய்து உரியவர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடந்தது.
தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளி முன்னேற்ற சங்கம் சார்பில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பேர்சில் தலைமை தாங்கினார்.. மாவட்ட செயலாளர் அழகுலட்சுமி முன்னிலை வகித்தார்.
மாவட்டத் துணைத் தலைவர் ஜேம்ஸ், கோவில்பட்டி வட்டார தலைவர் வீரபத்திரன் மற்றும் திரளான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு, தாலுகா அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

துணை தாசில்தார்கள் பாலு, பாலமுருகன் ஆகியோர் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சப் கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என போராட்ட குழுவினர் திட்டவட்டமாக கூறினர்.
இதனை அடுத்து, சப் கலெக்டர் ஹுமான்சு மங்கள் தாலுகா அலுவலகத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது,மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தற்போது 250க்கும் மேற்பட்ட மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அதனை முற்றிலும் அகற்றினால் தான் நில அளவை செய்ய முடியும். 250 மரங்களை அகற்றுவது என்பது வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் சேர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணி. அந்தப் பணிகளும் தற்போது துவங்கப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து மரங்களும் அகற்றப்பட்டு நில அளவை செய்யப்பட்டு உரியவர்களிடம் இடம் ஒப்படைக்கப்படும் என சப் கலெக்டர் தெரிவித்தார்.
டிசம்பர் 2-ம் தேதி வரை காத்திருப்போம், அப்போதும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3ஆம் தேதி கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதிகாரிகளிடம் கூறிவிட்டு மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.

முன்னதாக போராட்டம் தொடர்பாக, தென் மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் பேர்சில், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி பகுதியில் மாற்றுத் திறனாளிகள் வீடு கட்டி வாழ்வதற்காக அரசு சார்பில் அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் சுமார் 80 மாற்றுத் திறனாளிகளுக்கான இடம் நில அளவை செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த இடத்தில் அவர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இதில், சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது வரை நில அளவை செய்து கொடுக்கவில்லை. இதனால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் எது என தெரியாமல் மாற்றுத் திறனாளிகள் தங்கள் குடும்பத்தோடு சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், சுமார் 30 மாற்றுத் திறனாளிகளுக்கு நில அளவை செய்யப்பட்டும், அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.

மாற்றுத் திறனாளிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு, ஒரு சில தொண்டு நிறுவனங்களும், தன்னார்வ அமைப்பினரும் எங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க தயாராக உள்ளனர். ஆனால், அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை நில அளவை செய்து கொடுக்காததால் வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. ஏற்கனவே பல்வேறு பொருளாதார பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் மாற்றுத்திறனாளிகள், தங்கள் குடும்பத்தோடு வாடகை வீட்டில் வாசித்து வருகின்றனர். எனவே, அரசு ஒதுக்கீடு செய்த இடத்தில் நில அளவை செய்து மாற்றுத்திறனாளிகளிடம் ஒப்படைக்க அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர் கூறினார்.







