பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அஞ்சலி
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவர் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அரசின் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் .கே.என். நேரு, இ. பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு,. கே.ஆர். பெரியகருப்பன்,. பி. கீதா ஜீவன்,.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,.பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன்,. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா, கனிமொழி, நவாஸ்களி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், காதர்பாட்சா முத்துராமலிங்கம்,. செ. முருகேசன், . இராம. கருமாணிக்கம் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர்ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தை 1969-ல் பார்வையிட்டு, 1974-ல் மணிமண்டபமாக உருவாக்கி கொடுத்தவர் கருணாநிதி. பாம்பன் பாலத்தை கட்டிய நீலகண்டன் தான் இந்த மணி மண்டபத்தையும் கட்டினார். அதேபோல மூக்கையா தேவரின் முயற்சியால் அமைக்கப்பட்டு, மதுரையில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் தேவர் சிலை திறப்பு விழாவுக்கு அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரியை அழைத்துவந்து தலைமை வகித்தவரும் கருணாநிதிதான்.
மதுரை ஆண்டாள் புரம் பாலத்துக்கு தேவர் பெயரை சூட்டியதும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேவர் பெயரால் ரூ.25 லட்சம் மதிப்பிலான அறக்கட்டளையை உருவாக்கியதும் கருணாநிதிதான்.
2007-ல் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழாவை மாபெரும் அரசு விழாவாக கொண்டாடியதும், தேவரின் நினைவிடத்தில் அணையா விளக்கை அமைத்தது, தேவர் இல்லத்தை ரூ.10 லட்சத்தில் புதுப்பித்தது, ரூ.9 லட்சத்தில் தேவர் நூற்றாண்டு விழா வளைவு அமைத்தது போன்றவற்றை செய்தது கருணாநிதிதான்.

முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி பசும்பொன் கிராமத்துக்கு மட்டும் ரூ.2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயில் பணிகளை செய்தது திமுக அரசுதான். 1989-ல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்கி கல்வி வேலைவாய்ப்பில் இந்த சமூக மக்கள் முன்னேற வாய்ப்பை உருவாக்கியவர் கருணாநிதி. மேலநீதித நல்லூரில் அமைந்த பசும்பொன் தேவர் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதும், அந்த கல்லூரிக்கு 44 ஏக்கர் நிலத்தை வழங்கியதும் கருணாநிதி அரசுதான். அந்த கல்லூரியை சிலர் சீர்குலைத்தபோது, எனது அரசு அதில் தலையிட்டு இப்போது சிறப்பாக இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேவர் ஜெயந்தி விழாவில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மக்களை மழை வெயிலில் இருந்து பாதுகாக்க தேவர் நினைவிடத்தில் ரூ1.55 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தெய்வத் திருமகனார் அரங்கத்தை கடந்த ஆண்டு நான் திறந்துவைத்தேன். இப்போது பசும்பொன்னில் புதிதாக திருமண மண்டபம் அமைக்க வேண்டுமென ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. அதனை உடனடியாக ஏற்று ரூ.3 கோடியில் இங்கே தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என அறிவிக்கிறேன்”
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.







