கோவில்பட்டியில் கருணாநிதி முழுஉருவ சிலையுடன் திமுக கட்சி அலுவலகம்; மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்




கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் 3 சென்ட் நிலத்தில் தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகளுடன் நகர திமுக அலுவலகம்(கலைஞர் அறிவகம்) புதிதாக கட்டப்பட்டுள்ளது. முன் பகுதியில் கருணாநிதியின் முழுஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.அலுவலகத்தின் ஒரு பகுதியில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. திமுக கட்சி அலுவலகம் மற்றும் கருணாநிதி சிலையை மு,க.ஸ்டாலின் நேற்று இரவு திறந்துவைத்தார்.
.இதையொட்டி கோவில்பட்டி நகரம் விழாக்கோலம் பூண்டு இருந்தது. முதலமைச்சர் இரவு நேரத்தில் வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்ததால், கட்சி அலுவலகம் அமைந்துள்ள இளையரசனேந்தல் சாலை முழுவதும் இரவை பகலாக்கும் அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளுடன் தூண்கள் அமைக்கப்பட்டு ஜொலித்தன.
நாட்டுப்புற கலைஞர்களின் பல்வேறு விதமான வரவேற்பு நிகழச்சிகள் இடம் பெற்றன. விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் சாலையின் இருபுறமும் பாதுகாப்பாக கூடி இருந்தனர். கட்சி அலுவலக வாசலில் நடைமேடையுடன் விழா மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மார்கண்டேயன்,சண்முகையா, ராஜா, தூத்துக்குடி மேயர் ஜெகன் உள்பட பலர் வந்து இருந்தனர்,

விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து அங்கிருந்து கார் மூலம் கோவில்பட்டி வருகை புரிந்தார். ,முன்னதாக விழா தொடங்கி நடைபெற்றுகொண்டு இருந்தது. இரவு 9 ,மணிக்கு மேல் முதலமைச்சர் பயணம் செய்த கார் வந்தது, அவரது காரை தொடர்ந்து அமைச்சர்கள் நேரு,தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன். ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கார்களில் வந்தனர்.
காரில் இருந்து இறங்கி விழா மேடைக்கு ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வந்தனர்.அப்போது கூடி இருந்தவர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர்.கட்சி அலுவலகம் மற்றும் கருணாநிதி முழு உருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் கருணாநிதி சிலைக்கு கீழ்புறம் இருந்த உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து கட்சி அலுவலகத்துக்குள் சென்று பார்வையிட்டார்.
விழாவில் பங்கேற்ற மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு நகர திமுக சார்பில் வெள்ளி செங்கோல் ,மற்றும் வெள்ளி மயில் பரிசளிக்கப்பட்டது. இவற்றை அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்.பி. மற்றும் நகர செயலாளர் கருணாநிதி ஆகியோர் ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.

கட்சி அலுவலக கட்டிடம் அமைய பாடுபட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் நன்கொடையாளர்களை முதலமைச்சர் கவுரவித்தார். இத்துடன் விழா முடிந்தது.
அங்கிருந்து ஸ்டாலின் புறப்பட்ட போது கட்சி தொண்டர்கள் நூல் மற்றும் பொன்னாடைகள் வழங்கினார்கள். பொதுமக்கள் மற்றும் பல்வேறு சங்கத்தினர் கோரிக்கை ,மனுக்கள் வழங்கினர். அவற்றை பெற்றுக்கொண்டபிறகு ஸ்டாலின் காரில் முக்கூடல் புறப்பட்டு சென்றார். முன்னதாக கோவில்பட்டி வந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நகர எல்லையில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.







