சொத்துத் தகராறில் ஒருவர் குத்திக் கொலை: 4பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் அருகே தெற்கு கோவங்காடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (49), தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வளர்மதி, ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இத்தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர்.
செல்வகுமாருக்கும் அவரது அண்ணன் விஜயகுமார் குடும்பத்துக்குமிடையே சொத்துத் தகராறு இருந்தது.. ஓராண்டுக்கு முன்பு செல்வகுமாரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை விஜயகுமாரின் மகன்கள் சேதப்படுத்தியதால், அவர் ஆத்திரமடைந்து விஜயகுமாரின் மனைவி விஜயலட்சுமியை அரிவாளால் வெட்டினாராம். அதனால், முன்விரோதம் மேலும் வளர்ந்ததால், செல்வகுமார் தனது குடும்பத்தினருடன் பழையகாயலில் குடியேறினார்.
இதனிடையே, அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கோவங்காட்டில் குடியேறியதுடன், அங்கிருந்து வேலைக்குச் சென்றுவந்தார். நேற்று முன்தினம் செல்வகுமார் வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பியபோது, பழையகாயல்-கோவங்காடு விலக்கில் சிலர் வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்,

கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த செல்வகுமார், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருடுவமனையில் அனுமதிக்கபப்ட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து டிஎஸ்பிக்கள் மகேஷ்குமார் (திருச்செந்தூர்), நிரேஸ் (ஸ்ரீவைகுண்டம்), ஆத்தூர் ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
புகாரின்பேரில், ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிந்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த நிலையில், செல்வகுமார் கொலை தொடர்பாக தூத்துக்குடி தெற்கு கோவங்காடு தெற்கு தெரு விஜய குமார் மகன் ராஜேஷ் குமார் (25), சேர்வைகரன் மேடம், சிவஞான புரம் மகன் பாலா முகேஷ் (21), சிவகங்கா புரம் மாசானமுத்து மகன் பாலா விக்னேஷ் (19,) தங்கம்மாள் புரம் வீரமணி மகன் சபரிவாசன் (20) ஆகிய 4பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







