கோவில்பட்டி புதுரோடு இரவில் மிளிர்கிறது; புதிய எல்.இ.டி. மின் விளக்குகள் எரிய தொடங்கின

கோவில்பட்டி நகரின் மிக முக்கியமான சாலையாக புதுரோடு விளங்குகிறது. ரெயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையான புதுரோட்டில் நிறைய வங்கிகள், முக்கிய அலுவலகங்கள், பல்வேறு தொளில்கூடங்கள், கடைகள் உள்ளன.
இந்த சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைத்தும் சோடியம் விளக்கு நிறுவவில்லை.; இரவில் இருள் சூழ்ந்து காணப்படும் இந்த புதுரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முதல் முச்சந்தி விநாயகர் கோவில் வரை போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர்,
இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.யின் பரிந்துரையின் படி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 30 மின் கம்பங்களில் மொத்தம் 60 எல்.இ.டி. மின் விளக்குகள் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் தொடக்க விழா கடந்த மே மாதம் 19-ந்தேதி நகராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. துரை வைகோ எம்.பி.அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
இதை தொடர்ந்து பணிகள் தொடங்கி முடிவடைந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் நேற்று மாலையில் மின்விளக்குகள் எரிய தொடங்கின.

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. புதிய எல்இடி விளக்குகளை இயக்கி வைத்தார், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மதிமுக மாநிலத் துணைச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், நகரச் செயலாளர் பால்ராஜ்,மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன், நகர்மன்ற உறுப்பினர்கள், மதிமுக மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதுநாள் வரை இரவு நேரங்களில் இருளில் மூழ்கி கிடந்த புதுரோடு , நேற்று 60 விளக்குகள் எரிய தொடங்கியவுடன் அதிக வெளிச்சத்தில் மிளிர தொடங்கியது. பொதுமக்கள் இதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.







