குலசை தசரா திருவிழா கோலாகலம் : கோவில்பட்டியில் வேடமணிந்த பக்தர்கள்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திபெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது.
விழாவின் 3-ம் நாள் நாளான நேற்று காலை 7.30 ,மணி முதல் இரவு 7.30 வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இரவில் அம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி, சிவன், முருகன், குறவன்-குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்துள்ளனர். ஒவ்வொரு ஊர்களிலும் இது போல் வேடமிட்டு விரதம் இருக்கும் பக்தர்கள் வீதிகளில் சுற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் கோவில்பட்டி மந்தித்தோப்பு கெச்சிலாபுரம் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன், மாசாணியம்மன் திருக்கோவில் பூவனநாதர் தசரா குழுவினர் காளி, அம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து ,விரதம் இருந்து வீதி உலா வருகின்றனர்
அந்த சமயத்தில் பொதுமக்களிடம் இருந்து காணிக்கைகளை பெற்று கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் வேடமிட்ட பக்தர்கள் காணிக்கை வசூல் செய்து வருகிறார்கள்.







