மரணம் அடைந்த நடிகர் ரோபோ சங்கர் இறுதிச்சடங்கு இன்று மதியம் நடக்கிறது
ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய காட்சி.
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைகள் மூலம் மீண்டு வந்த அவர் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கினார். முன்பு போல உடல் நலமும் தேறினார்.
சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46.

ரோபோ சங்கருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரோபோ சங்கர், செப். 16ம் தேதி அன்று மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு குடலில் ரத்தப் போக்கு இருந்தது. மேலும் உள் உறுப்புகள் செயலிழந்த நிலையில் வயிற்றுப்பகுதியிலும் மிக தீவிரமான பிரச்சினைகள் இருந்தன.
தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு எங்கள் டாக்டர்கள் தொடர்ந்த சிகிச்சை அளித்த போதிலும் பலன் அளிக்கவில்லை. செப் 18ம் தேதி அன்று இரவு 9.05 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது,
இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை, வளசரவாக்கம் பகுதியில் நடிகர் ரோபோ சங்கரின் வீடு உள்ளது. அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காகவும், பிரபலங்களின் அஞ்சலிக்காகவும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு மேல் நடிகர் ரோபோ சங்கரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,’
ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர். பிரியங்கா டி.வி. தொடர்களில் நடித்துள்ளார். இந்திரஜா விஜய்யுடன் ‘பிகில்’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரோபோ சங்கரின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,”மேடைக் கலைஞராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி – சின்னத்திரையில் சாதித்து – திரைத்துறையில் தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தார் – நண்பர்கள் – கலையுலகினர் – ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும் – இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.







