கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலின் நூற்றாண்டு விழா; 20-ந்தேதி நடக்கிறது
தீப்பெட்டி தொழிலின் நூற்றாண்டு விழா வருகிற 20-ம் தேதி சனிக்கிழமை அன்று கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் – மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். மேலும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக கல்லூரி வளாகத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், தீப்பெட்டி தொழில் தொடர்பான கண்காட்சியும், தீப்பெட்டி தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம் அன்றைய தினம் நடைபெற உள்ளது.

மத்திய மந்திரி பங்கேற்கும் விழா தொடர்பான முன்னேற்பாடுகளை இன்று பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினார். அப்போது நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம், குளோபல் சேப்டி மேச்சஸ் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் தலைவர் ரத்தினகுமார் மற்றும் நிர்வாகிகள், பாஜக வடக்கு மாவட்ட தலைவர் சரவண கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜ், நகரத்தலைவர் காளிதாசன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதன் பின்னர் பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தமிழநாட்டு நலனில் அக்கறை உள்ளவர். அவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் குறித்து நன்றாக தெரிந்தவர். இதனால் அவர் தீப்பெட்டி தொழிலை பாதுகாப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்.
தீப்பெட்டி தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய சீனா லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. சீனாவில் இருந்து வரக்கூடிய பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது. அவை அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆனால், அப்படி அனைத்து பொருட்களுக்கும் தடை விதிக்க முடியாது.
ஏனென்றால் வர்த்தகம் என்பது உலகளாவியது. சீனாவில் இந்திய பொருட்களுக்கு தடை விதித்ததால் அது நம்மை பாதிக்கும். ஆனால், சீனா லைட்டர்களுக்கு பொருத்த வரை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். மத்திய அரசு துணிச்சலான முடிவெடுத்து சீனா லைட்டகளை தடை செய்ததால் தீப்பெட்டி தொழில் மீண்டும் வளர்ச்சி அடைந்துள்ளது.
இவ்வாறு ராம.சீனிவாசன் கூறினார்







