அமித்ஷாவை சந்தித்தபோது எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன? – பரபரப்பு தகவல்கள்
டெல்லி சென்ற அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், ஐ.எஸ்.இன்பதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இரவு விருந்தும் அமித்ஷாவின் இல்லத்திலேயே பரிமாறப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் குறித்தும், அமித்ஷாவை சந்தித்தது குறித்தும், அதுவும் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும்போது, முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டுவந்தார் என்றும் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதனால், மனம் திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் அமித்ஷாவுடன் சந்திப்பு குறித்த புகைப்படங்களை இன்று காலை வெளியிட்டார். மேலும், முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்து இருந்தார்.
ஆனாலும், அவர் அமித்ஷாவிடம் பேசியது குறித்த உண்மைத்தகவல் வெளிவராமலேயே இருந்தது. தற்போது அந்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, தமிழக அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மீதான அமலாக்கத்துறை வழக்குகளை தேர்தலுக்கு முன்னால் விரைவாக விசாரிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளிநாட்டு கார் இறக்குமதி செய்த வழக்கு, டாஸ்மாக் முறைகேடு வழக்கு, மணல் முறைகேடு வழக்குகளையும் துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.







