கோவில்பட்டியில் சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி தீப்பிடித்து நாசம்
கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே சாலை ஓரத்தில் லாரிகள், சரக்கு வாகனங்கள் நிறுத்துவது வழக்கம்.நேற்று தூத்துக்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு சொந்த கண்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டு இருந்தது,
மாலை நேரத்தில் அந்த லாரியின் முன்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் கரும்புகையுடன் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
அந்த லாரியில் டிரைவராக பணிபுரியும் கொலக்கட்டாங்குறிச் சியை சேர்ந்த மணிகண்டன் தூத்துக்குடியில் இருந்து சிவகாசிக்கு அட்டை ஏற்றிச் சென்று இறக்கிவிட்டு கூடுதல் பேருந்து நிலையம் அருகே கண்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு தனது ஊருக்கு சென்று விட்டார்.

அந்த நேரத்தில் கண்டெய்னர் லாரியின் முன் பகுதி மற்றும் டயர்கள் தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது. இது பற்றிய தகவலின் பேரில் கோவில்பட்டி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து 2 வண்டிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நுரை கலந்ததண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர், தீவிபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தாழ்வாக இருந்த மின்சார கம்பி காற்றுக்கு உரசி லாரியில் தீப்பிடித்து இருக்கலாம் என்று தெரிகிறது,
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







