கோவில்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் அடிக்கடி நிகழும் விபத்துக்களை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் தலைமையில், மாவட்ட உதவி செயலாளர் பாபு, நகர உதவி செயலாளர்கள் அலாவுதீன், விஜயலட்சுமி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த தங்கமாரியப்பன், முத்துராஜ், ஏ.ஐ.டி.யு.சி. மாரியப்பன் உள்ளிட்டோர் நெடுஞ்சாலைத் துறை அலுவலக கண்காணிப்பாளர் மரிய ஜேம்ஸ் ராஜிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது :-

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தினமும் குறைந்தபட்சம் 3 விபத்துக்களாவது நடக்கின்றன. இதுவரை நடந்த விபத்துக்களில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன் நடந்த விபத்திலும் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
இதுபோன்ற விபத்துக்களையும், உயிரிழப்புகளை தடுக்க சுரங்கப்பாதையில் ‘தம்புல்டு’ வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சுரங்கப்பாதையின் இருபுறமும் நடந்து வரும் அணுகுசாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
மனுவை பெற்றுக் கொண்டு அவர், உயர் அதிகாரிகளுக்கு கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.







