காதல் தோல்வியால் விரக்தி: தற்கொலைக்கு முன்பாக நண்பருக்கு வாட்சப் ஆடியோவில் வாலிபர் உருக்கம்
கோவில்பட்டி வள்ளுவர்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ரவி பாண்டியன் மகன் சக்தி கணேஷ் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் அதேபகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்தார்.
ஆனால் அந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறொருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த சக்தி கணேஷ், வேளைக்கு சரியாக செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்,
மேலும் அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது, இதனால் அவரது பெற்றோர் கண்டித்தனர். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தனது நண்பரை செல்போனில் தொடர்பு கொண்டார்.
ஆனால், நண்பர் போனை எடுக்கவில்லை. இதனால் அவருக்கு சக்திகணேஷ் வாட்ஸ்-அப் மூலம் ஆடியோவாக பேசி அனுப்பினார்.
அதில் ‘‘அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் பார்ப்போம். உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை. எதுவும் நினைத்துக் கொள்ளாதே. எல்லாம் முடிந்துவிட்டது, அவ்வளவுதான். நீ காலையில் போனை எடுத்து பார்க்கும்போது தனியார் கல்லூரி அருகே உள்ள தண்டவாளத்தில் இருப்பேன். என்னை வந்து பார்’’ என்று உருக்கமாக ஆடியோவில் பேசி இருந்தார்,.

ஆனால் நண்பர் தூங்கிவிட்டதால் செல்போனை பார்க்கவே இல்லை. இதையடுத்து சக்தி கணேஷ் கோவில்பட்டி அருகே உள்ள பெத்தேல் ரெயில்வே கேட் அருகில் உள்ள தண்டவாளப்பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மறுநாள் காலையில் ரெயில் தண்டவாள பகுதியில் சிதைந்து கிடந்த சக்தி கணேஷ் உடலை பார்த்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே சக்தி கணேசின் நண்பர் காலையில் செல்போனை எடுத்து பார்த்தபோதுதான், அவர் அனுப்பிய உருக்கமான ஆடியோவை கேட்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் சக்தி கணேசின் பெற்றோருக்கு தகவல் அளித்தார். இதன்பேரில் அவரது பெற்றோர் பதறியடித்துக்கொண்டு பெத்தேல் ரெயில்வே கேட் பகுதிக்கு சென்றனர். அங்கு சிதைந்து கிடந்த தனது மகனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.







