பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க கோரி காங்கிரசார் முக்காடு அணிந்து நூதன போராட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2024-25) பெய்த கனமழையில் கயத்தாறு வட்டம் கடம்பூர் பிர்கா, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிட்டாரம் வட்டங்களில் உளுந்து, பாசி ஆகியவை முற்றிலும் செடியிலேயே முளைத்துவிட்டது. சின்ன வெங்காயம், மிளகாய் செடிகள் அழுகின. மேலும், மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் சேதமடைந்தன.

சேதமடைந்த பயிர்களுக்கு முழுமையான நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், 2024-25-ம் ஆண்டு கனமழையால் பாதித்த தூத்துக்குடி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட ரூ.56 கோடி நிவாரணத் தொகையை உடனடியாக விடுவித்து, விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க வேண்டும். 2024-25-ம் ஆண்டுக்கான உளுந்து, பாசி, சின்ன வெங்காயம், மிளகாய் செடி, கொத்தமல்லி, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்குரிய பயிர் காப்பீட்டுத் தொகையை விடுவிக்க வேண்டும். நடப்பாண்டு டி.ஏ.பி. யூரியா உள்ளிட்ட அனைத்து உரங்களும் மற்றும் விவசாய இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் தலையில் முக்காடு அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் அய்யலுசாமி தலைமை தாங்கினார்.. மாவட்ட பொறுப்பாளர் அருண் பாண்டியன்,மாவட்ட செயலாளர் துரைராஜ்,பொருளாளர் கார்த்திக் காமராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகராஜ், ஐ.என்.டி.யு.சி. ராஜசேகர், காங்கிரஸ் நிர்வாகிகள் சுந்தர்ராஜ், செல்லத்துரை, சக்திவிநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.







