இலவச வீட்டுமனை பட்டா: முக்குலத்தோர் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முக்குலத்தோர் அமைப்பு சாரா, அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
தொடர்ந்து அவர்கள் துணை வட்டாட்சியர் உமாதேவியிடம் வழங்கிய மனுவில் கூறி இருந்ததாவது:-
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடந்த 2002-ம் ஆண்டு 280 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. அந்த பட்டாக்களில் அவர்கள் வீடு கட்டாததால், 2024-ம் ஆண்டு அந்தப் பட்டாக்களை ரத்து செய்ய மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து 15 பேர் நீதிமன்றம் மூலமாக திரும்ப பட்டா பெற்றனர்.

தற்போது அந்த இடத்தில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்பு செய்பவர்களிடம் இருந்து அந்த நிலத்தை மீட்டு வறுமை கோட்டுக்கு கீழே உள்ள நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேலும், தொழிலாளர் நல வாரியத்தில் கட்டுமான தொழிலாளிகளுக்கு இலவச வீடு வழங்குவது போல, தொழிலாளர் நல வாரிய அட்டை வைத்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், என தெரிவித்திருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அவர் வட்டாட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.







