அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும்; செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வுக்கும்,, கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி 5-ந் தேதி மனம் திறந்து பேச உள்ளேன் என்று செங்கோட்டையன் கூறி இருந்தார்,
அதன்படி இன்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கோபி கரட்டூர் ரோட்டில் உள்ள கோபி புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில், மேசையில் முன் வைக்கப்பட்டுள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை வணங்கினார். அதன்பின் அவர் கூறியதாவது:-
அண்ணாவின் தொண்டராக, மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் தலைவராக எம்.ஜி.ஆர் விளங்கினார். நாடே வியக்கத்தக்க செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மாபெரும் வெற்றிகளை ஈட்டித்தந்த தலைவர் எம்.ஜி.ஆர். அவர் நல்ல திட்டங்களை இயற்றி இந்தியாவிலேயே சிறந்த ஆட்சியை நடத்தினார்.
கோவையில் நடந்த பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதால் எம்.ஜி.ஆர் என்னை மனதார பாராட்டினார். கோபிசெட்டிபாளையத்திற்கு பதில் சத்தியமங்கலத்தில் போட்டியிட எம்.ஜி.ஆர் கூறினார். எம்.ஜி.ஆருக்கு பிறகு உலக நாடுகளே திரும்பி பார்க்கும் வகையில் சிறந்த ஆட்சியை ஜெயலலிதா வழங்கினார்.

ஆன்மீகவாதிகளும் திராவிட தலைவர்களும் ஏற்றுக்கொண்ட தலைமை ஜெயலலிதா. தன்னை விமர்சித்த தலைவர்களை எல்லாம் அரவணைத்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா மறைந்தபிறகு, அதிமுக-விற்கு பல்வேறு சோதனைகள் வந்தன; இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதற்காக சசிகலாவை ஒருமனதாக நியமித்தோம். அதன்பின் ஒவ்வொரு தடுமாற்றம் வரும்போதும், தடுமாற்றம் இல்லாமல் நான் செயல்பட்டுள்ளேன். கடந்த காலத்தில் எனது செயல்பாடுகளை ஜெயலலிதா அவர்களே பாராட்டியது அனைவருக்கும் தெரிந்ததே.
அதிமுக உடைந்துவிடக்கூடாது என்பதால் அனைவரும் சேர்ந்து சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கினோம். இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதாலேயே நான் அமைதியாக இருந்தேன். முன்னாள் முதல்-அமைச்சர் தற்போதைய எதிர்க்கட்சிதலைவரை சசிகலா முதல்-அமைச்சராக முன்மொழிந்தார்.
2017 ஆட்சியில் அமர்ந்தபிறகு 2019, 2021, 2024 தேர்தல்களை சந்திக்கும்போது களத்தில் பல்வேறு பிரச்சினை ஏற்பட்டது. 2024-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும் வேலுமணிகூட இதை ஒருமுறை வெளிப்படுத்தினார்.அதன்பின் பொதுச்செயலாளரை சந்தித்து கழகம் தொய்வோடு இருப்பதை எடுத்துரைத்தோம். கழகத்தை ஒன்றிணைக்கவும், வெளியே சென்றவர்களை மீண்டும் இணைக்கவும் கோரிக்கை வைத்தோம்.
வெளியே சென்றவர்கள், எந்த நிபந்தனையும் இல்லை எங்களை கட்சியில் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த கருத்தை ஏற்க மறுக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம். பிரிந்தவர்களை இணைத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும்.
இவ்வாறு கே,.ஏ.செங்கோட்டையன் கூறினார்.







