அமெரிக்காவின் 25 சதவீத கூடுதல் வரி அமலுக்கு வந்தது; இந்தியாவுக்கு பாதிப்புகள் என்னென்ன?
உக்ரைனுக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கு முன்பு ரஷியா தொடங்கிய போரானது முடிவுக்கு வராமல் உள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர ரஷிய அதிபர் புதினுடன், மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளால் அந்நாட்டுக்கு பொருளாதார வளம் சேருகிறது என்றும் அது போரை ஊக்குவிக்கிறது என்றும் அமெரிக்கா கூறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்கு எதிரான நடவடிக்கையாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு இந்தியா மீது வரிகளை விதித்து வருகிறது.
இதன்படி, 25 சதவீத கூடுதல் வரி உள்பட மொத்தம் 50 சதவீத வரியானது இந்திய பொருட்கள் மீது விதிக்கப்படும் என டிரம்ப் அரசு தெரிவித்தது. இந்திய இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் 25 சதவீத கூடுதல் வரி தொடர்பான நோட்டீஸ் ஒன்றையும் அமெரிக்கா நேற்று பிறப்பித்தது. இந்த நடைமுறை இன்று (27-ந்தேதி) அதிகாலை 12.01 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதற்கான அலுவல்பூர்வ அறிவிப்பு ஒன்றை டிரம்ப் நிர்வாகம் நேற்று பிறப்பித்தது. இதன்படி, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் அந்த அறிவிப்பில், ரஷியாவால் அமெரிக்காவுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக புதிய வரிவிதிப்புகள் அமல்படுத்தப்படும். இந்த கொள்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கு இந்த வரி விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எனினும், குஜராத்தில் நிகோல் பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மக்களிடையே பிரதமர் மோடி பேசும்போது, எவ்வளவு பொருளாதார நெருக்கடி வந்தபோதும், அதில் இருந்து மீண்டு வலிமையுடன் நாம் வருவோம் என குறிப்பிட்டார்.

சிறு தொழில் முனைவோர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு ஒருபோதும் தீமை ஏற்பட மத்திய அரசு விடாது என அப்போது அவர் கூறினார். இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டாலும் கூட அதற்கு மாற்று நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்படும் 25 சதவீத கூடுதல் வரியால், என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் 8,730 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும்.







