தெற்கு திட்டங்குளத்தில் அடிப்படை வசதிகள் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி அருகே திட்டங்குளம் கிராமத்தில் வாறுகால், சாலை வசதிகள் செய்து தர வேண்டும். தெற்கு திட்டங்குளம் நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும். திட்டங்குளம் ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க கூடாது. கல்குவாரி மற்றும் சரள் குவாரிகளை அரசே ஏற்று நடத்தி, எம்-சாண்ட் மற்றும் சல்லி கற்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் பாஜக கிழக்கு மண்டலம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரைப் பாண்டியன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் மகாலட்சுமி வேல்முருகன் முன்னிலை வகித்தார்.

வடக்கு மாவட்டத் தலைவர் சரவணகிருஷ்ணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர் வேல்ராஜா,கிளை தலைவர் மாரிமுத்து, பாஜக நிர்வாகிகள் பாலு அம்மன் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்







