காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம்


வீரமாமுனிவர் பங்குகுருவாகப் பணியாற்றிய கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலயத்தில் விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றத்தையொட்டி இன்று மாலை சுமார் 6.45 மணிக்கு ஆலயம் முன்பு கொடிமரம் நடப்பட்டது.
அதைத்தொடர்ந்து மிக்கேல் அதிதூதரின் திருவுருவப் பவனி நடந்தது. பின்னர், ஜெபமாலை தோட்டத்திலிருந்து கொடிகள் பவனியாக ஆலயம் முன்பு நடப்பட்டுள்ள கொடிமரத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் கொடியை ஆசீர்வதித்து,கொடிமரத்தில் முதலாவதாக திருத்தலக் கொடியும், அதைத் தொடர்ந்து கிறிஸ்தவ மக்கள் கொண்டு வந்திருந்த வண்ணக் கொடிகளும் அணிவகுப்பாகக் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து, ஜவகர் நகர் பங்கு பணியாளர் சகாய ஜான், சிங்கம்பாறை பங்கு பணியாளர் அருள் நேசமணி, கல்லிடைக்குறிச்சி பங்கு பணியாளர் அருள் அந்தோணி ஆகியோர் திருப்பலி மற்றும் மறையுரை வழங்கினர். இதில் திரளான கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றம் நிகழ்ச்சியை முன்னிட்டு, இன்று மாலை 5.30 மணி முதல் சமபந்தி விருந்து நடந்தது. கொடியேற்று விழாவையொட்டி, வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.

திருவிழாவின் 4-ம் திருநாளான 9-ம் தேதி காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடு, 5-ம் திருநாளான 10-ம் தேதி காலை 8.30மணிக்கு புது நன்மை விழா, 9-ம் திருநாளான 14-ம் தேதி மாலை 6.30மணிக்கு ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.
10-ம் திருநாளான 15-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு மதுரை உயர் மறை மாவட்ட ஆயர் அந்தோனிசாமி சவரி முத்து தலைமையில் தேரடித் திருப்பலி நடக்கிறது. அதைத் தொடர்ந்து, கும்பிடு சேவை செய்து பக்தர்கள் நேர்ச்சை செலுத்துகின்றனர். மாலை 7 மணிக்கு திருப்பலி, நற்கருணை பவனி நடக்கிறது.
ஏற்பாடுகளை பேராலய அதிபர் மற்றும் பங்கு தந்தையுமான மோயீசன், உதவி பங்குதந்தை நிரோ ஸ்டாலின், ஆன்மீக தந்தை அந்தோணி ராஜ், களப்பணியாளர் சகோதரர் ஜீடு சைமன், மரியின் ஊழியர் சபை அருள்சகோதரிகள், புனித தெரசாவின் கார்மேல் சபை அருள் சகோதரிகள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் செய்து வருகின்றனர்.







