சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தந்தை-மகன் சரண்; இன்னொருவர் என்கவுன்ட்டரில் பலி
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோட்டம், உடுமலை அருகே சிக்கனூத்து கிராமத்தில் உள்ளது. இந்த தோட்டத்தை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (வயது 65), அவருடைய மகன் மணிகண்டன் (30) ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக குடும்பத்துடன் அங்கு தங்கி பராமரித்து வருகின்றனர்.
மூர்த்தியின் மற்றொரு மகன் தங்கபாண்டி (25), நேற்று முன்தினம் இரவு அந்த தோட்டத்துக்கு வந்தார். தந்தை-மகன்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக திடீரென தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரம் அடைந்த மணிகண்டன், தந்தை மூர்த்தியை சரமாரியாக தாக்கினார்.

இதில் அவரது முகத்தில் ரத்தம் கொட்டியது. இதனால் மூர்த்தி, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, தன்னை தனது மகன்கள் கொலை செய்ய முயற்சிப்பதாக கூறினார்.கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார், இரவு ரோந்து பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் (57) மற்றும் போலீஸ்காரர் அழகுராஜ் ஆகியோரை சம்பவ இடத்துக்கு செல்லுமாறு உத்தரவிட்டனர்.
அதன்பேரில் சண்முகவேல், அழகுராஜா ஆகியோர் ரோந்து வாகனத்தில் தென்னந்தோப்புக்கு சென்றனர். இதேபோல் தகராறு பற்றி தகவல் அறிந்த ஆமந்தகடவு பகுதியில் வசிக்கும் தோட்டத்து மேலாளர் ரங்கசாமி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பிரபு, செல்வம் ஆகியோரும் அங்கு வந்தனர்தென்னந்தோப்புக்குள் ரத்தகாயத்துடன் இருந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தி, சமரசம் செய்ய முயன்றனர்.
ஆனால் அவர்கள் போலீசாரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், தங்களுக்குள் நடந்த சண்டையை அவர்கள் மறந்து எங்களது குடும்ப பிரச்சினையில் தலையிடுவதற்கு நீங்கள் யார்? என்று போலீசார் மற்றும் தோட்டத்து மேலாளரிடம் தகராறு செய்தனர்.ஆத்திரம் அடைந்த மணிகண்டன், அங்கு கிடந்த அரிவாளை எடுத்து அங்கிருந்தவர்களை வெட்டுவதற்காக ஓடி வந்தார். இதைப்பார்த்து போலீஸ்காரர் அழகுராஜ், மேலாளர் ரங்கசாமி மற்றும் பிரபு, செல்வம் ஆகிய 4 பேரும் அங்கிருந்து தப்பி இருட்டில் மறைந்து கொண்டனர்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தப்ப முயன்றபோது, அவரது கழுத்தில் மணிகண்டன் அரிவாளால் வெட்டினார். இதில் நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார். ஆத்திரம் தீராத மணிகண்டன், சண்முகவேலின் தலையை துண்டித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தப்பி ஓடிய 4 பேரையும் வெட்டுவதற்காக அரிவாளுடன் மணிகண்டன் தேடினார். ஆனால் அவர்களை மணிகண்டனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் 4 பேரும் உயிர் தப்பினர்.
இதன் பிறகு மூர்த்தி, மணிகண்டன், தங்கபாண்டி ஆகியோர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். உயிர் தப்பிய 4 பேரும், சம்பவம் குறித்து குடிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறிதுநேரத்தில் போலீசார் அங்கு சென்றனர். அங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலலயில் கிடந்த சண்முகவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தை மற்றும் 2 மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து . அவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பக்கத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, கொலையாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டிருந்தது.
இதனிடையே மூர்த்தி, தங்கபாண்டி ஆகியோர் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மாலை சரண் அடைந்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மணிகண்டன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
கைது செய்யச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் சரவணக்குமாரை வெட்டி விட்டு தப்ப முயன்ற போது, தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் மணிகண்டன் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டன.
கொலை சம்பவத்தில் தொடர்புடைய தந்தை, மகன்கள் 3 பேரும் பழைய குற்றவாளிகள் என்ற அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேர் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதாவது மூர்த்தி மீது 2 வழக்குகளும், மணிகண்டன், தங்கபாண்டி ஆகியோர் மீது தலா 4 வழக்குகளும் உள்ளன.. இவர்கள் 3 பேரும் தலைமறைவாக வாழ்வதற்கு தோட்டத்து வேலையை தேர்வு செய்து இங்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது .மேலும் விசாரணை நடந்து வருகிறது,







