தானிய விதைகள் விலை உயர்வு; விவசாயிகள் கவலையை போக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் உள்ளன. மாவட்டத்தில் தென்பகுதி ஆற்றுப்பாசனமும், வட பகுதி வானம் பார்த்த மானாவாரி கரிசல் பூமியாகும்.
இந் நிலங்களில் ஆண்டுக்கொரு முறை புரட்டாசி மாதம் பெய்யக்கூடிய வடகிழக்கு பருவ மழையை நம்பியே = உளுந்து, பாசி, கம்பு, மக்கா, வெள்ளைச் சோளம், பருத்தி, சூரியகாந்தி, எள், மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம் போன்ற பல்வேறு சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பணப்பயிர்கள், மூலிகை வித்துக்கள் பயிரிடப்படுகிறது.
முன்னோர்கள் காலத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடை சானங்களை உரமாகவும், முந்தைய ஆண்டு விளைந்த திரட்சியான கதிர்களை பிரித்தெடுத்து அதில் உள்ள மணிகளை விதையாகவும், பயிர்களை தாக்கும் விட்டில் பூச்சிகளை அழிக்க கால்நடை கோமியங்களை பூச்சிக் கொல்லி மருந்தாகவும் கால்நடைகள் மூலம் உழவு செய்தும் விவசாயம் செய்து வந்தனர்.

இதனால் மண் வளம் பாதுகாக்கப்பட்டு விளையும் தானியங்கள் நூறு சதவீதம் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டது. இத் தானியங்கள் மிகுந்த சத்துடனும் ரசாயன கலப்படம் இன்றியும் இருந்தது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப உற்பத்தியை பெருக்க விவசாயத்தில் தொழிற்புரட்சி, அதிக மகசூல் பெறுவது போன்ற யுத்திகளை அரசு கையாளத் தொடங்கியது. இதனால் இயற்கையான கால்நடை சானங்களுக்கு பதிலாக ராசாயன உரம், நாட்டு ரக விதைகளுக்கு பதிலாக அதிக விளைச்சலை தரக்கூடிய வீரிய ஒட்டு ரக விதைகள், விட்டில் பூச்சிகளை விரட்ட பஞ்ச காவ்யங்களுக்கு பதிலாக ரசாயன மருந்துகள் என மண் வளம் பாதிக்கக்கூடிய செயற்கை முறை விவசாயத்திற்கு மாறிவிட்டனர்.
இதனால் கூடுதல் விளைச்சல் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்கால விவசாயம் முழுக்க அரசை நம்பியே செய்ய வேண்டிய சூழல் உருவாகி விட்டது. தவிர விதைகளான உளுந்து, பாசி, கம்பு, மக்கா, வெள்ளைச் சோளம், பருத்தி, சூரியகாந்தி போன்ற விதைகள் அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் உற்பத்தி செய்யக் கூடிய விதைகளை நம்பியே நாம்பயிர் செய்ய வேண்டி உள்ளது.
இதனால் ஆண்டு தோறும் விதை நிறுவனங்கள் இஷ்டத்திற்கு விதைகள் விலை உயர்வை அதிகரித்து வருகின்றன.. விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள் விலை மட்டும் 10 ஆண்டுகளுக்கு முந்தைய விலையே நடப்பாண்டு வரை நீடிக்கிறது.
இதனால் விவசாயிகள் ஆண்டுக்கு ஆண்டு நஷ்டமடைகின்றனர். தவிர விவசாய கூலி ஆட்களின் சம்பளம் 10 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்து விட்டது. இந்நிலையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் உ.பி மாநில அரசு, அனைத்து விளைபொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து கடந்தாண்டு முதல் அரசே நேரடியாக கொள்முதல் செய்கிறது.

தெலுங்கானா அரசு ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வரை மானியமாக வழங்குகிறது.. இதனால் அம்மாநில விவசாயிகள் ஆர்வத்துடன் விவசாயம் செய்கின்றனர். அதே போல் தமிழக அரசும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் கடந்தாண்டு 501 ரக வெள்ளைச்சோளம் விதை மூன்று கிலோ பை ரூ 850 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்தாண்டு கடந்தாண்டை விட ரூ 200 விலை உயர்ந்துள்ளது. மக்காச்சோளம் விதை 4 கிலோ பை கடந்தாண்டு ரூபாய் 1300. இந்தாண்டு ரூ. 300 விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 475 கிராம் பாக்கெட் பருத்தி விதை விலை ரூ. 900 இந்தாண்டு ரூ 1100 க்கு விலை உயர்ந்துள்ளது..
கம்பு ஒன்றரை கிலோ பை ரூ. 800க்கு விற்கப்பட்டது. இந்தாண்டு பைக்கு ரூ 200 விலை உயர்வு ஏற்பட்டுள்ளது, உளுந்து 5 கிலோ பை ரூ 1000 இந்தாண்டு ரூ 1300 வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
விதைகள் விலை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டு செல்வதை தடுத்து கடந்தாண்டு விற்பனை செய்த விலையிலேயே இந்தாண்டும் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு விதை நிறுவனங்களை தன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தவிர மேற்கண்ட வீரிய ஒட்டுரக விதைகளை பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதை தவிர்த்து தமிழகத்திலேயே தனியார் விதைப்பண்ணைகளை துவக்கி விதைகள் உற்பத்தி செய்வதற்கு ஏற்ற கட்டமைப்பை அரசு உருவாக்கி தர வேண்டும் விதைகள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்,







