தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
தூத்துக்குடியில் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தின் 443 ம் ஆண்டு திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலை 7 மணிக்கு கொடியேற்றறத்திற்கான சிறப்பு திருப்பலி, மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து தூய பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக அருள்தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்குதந்தைகள் பொதுமக்கள் கொடியை ஏற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மரியே வாழ்க என முழக்கமிட்டனர்.

பின்னர் உலக சமாதனத்தை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட புறாக்கள் பறக்கவிடப்பட்டன. துறைமுகத்திலிருந்து சைரன் ஒலிப்பு ஒலிக்கப்பட்டது. ஆலய கொடியேற்றத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் நிறைகுடம் பால் மற்றும் வாழைப்பழம் தார், ஆகியவற்றை கொடிமரத்தின் முன் வைத்து வணங்கி கொடியேற்றம் முடிந்ததும் அனைவருக்கும் வழங்கினார்கள். சிறு குழந்தைகளை கொடி மரத்தின் முன்பு உட்காரவைத்து வழிபட்டனர்.

விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. ஆகஸ்டு 3-ந் தேதி நற்கருணை பவனியும், 4-ந் தேதி இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனியும், 5-ந் தேதி நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனியும் நடக்கிறது.
கொடியேற்றம் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், கோட்டாட்சியர் பிரபு, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உட்பட லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை ஸ்டார்வின், உதவி பங்குத்தந்தை பிரவீன் ராசு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
விழாவில் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள், பங்குத்தந்தைகள் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்துகின்றனர்.







