சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் தலையில் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்பு ஓய்வூதியம் ரூ.6750 மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும். ஓய்வு வரும் போது வாங்கும் சம்பளத்தில் இருந்து 2.57 சதவீதம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்,. வட்டார தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.
மாவட்ட இணை செயலாளர் ராமலட்சுமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கனகவேல், செயற்குழு உறுப்பினர் கார்த்திகை செல்வி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கயத்தாறு ஒன்றிய குழு உறுப்பினர் மாரிச்சாமி மற்றும் திரளானோர் கலந்து கொண்டு தலையில் கருப்பு முக்காடு போட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.







