முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் கபாலீசுவரர் கலைக்கல்லூரி விழாவில் இன்று காலை பங்கேற்க இருந்த நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலையில் நடைபயிற்சியின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய மருத்துவ அறிகுறிகள் அடிப்படையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், 2 நாட்கள் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியதுடன் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறுமாறு கூறினர்.
இதனால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், முதல்-அமைச்சரின் கோவை, திருப்பூர் பயணங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்-அமைச்சரின் திருப்பூர் மாவட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.







