மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியலில் ஈடுபட ஊர்வலம்: கோவில்பட்டியில் மறியலில் ஈடுபட்ட 376 பேர் கைதாகி விடுதலை

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ரெயில் மறியலில் ஈடுபட நேற்று மாலையில் குவிந்தனர். இதைத்தொடர்ந்து மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதன், கிழக்கு இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

அப்போது புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும். போனஸ் பெறுவதற்கான ஊதிய வரம்பு, அதிகபட்ச போனஸ் சதவீதம் என அனைத்து வரம்புகளையும் ரத்து செய்ய வேண்டும். தொழிற்சங்க பதிவிற்காக மனு செய்தால் 45 நாட்களுக்குள் பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு, மருந்து, விவசாய இடுபொருட்கள் மற்றும் விவசாய எந்திரங்கள் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும். அனைத்து விவசாய விலைப் பொருள்களும் மொத்த உற்பத்தி செலவிற்கு மேல் 50 % கூடுதலாக குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும். இ. எஸ். ஐ. திட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

பின்னர் பயணியர் விடுதியில் இருந்து தொ.மு.ச. செயலாளர் மாரிமுத்து, பூல்பாண்டியன, சி. ஐ. டி. யு. மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் தெய்வேந்திரன், சிவக்குமார் , ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர்கள் பாபு, வேலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம்,நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், நகரத் துணைச் செயலாளர்கள் அலாவுதீன், விஜயலட்சுமி ,ஐ. என். டி. யு. சி. மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகரன், ஹெச்.எம்.எஸ். மணிகண்டன், ஏ.ஐ.சி.சி.டி.யு. சண்முகப்பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் ரெயில் நிலையம் நோக்கி போராட்டத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும்,அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நடுரோட்டிலேயே உட்கார்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதை தொடர்ந்து ரெயில் மறியல் போராட்டத்திற்கு முயன்றதாக தொழிற்சங்கங்களை சேர்ந்த 182 பெண்கள் உள்பட 376 பேரை போலீசார் கைது செய்து மினி பஸ்சில் ஏற்றி சென்றனர். அவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இரவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்,







