கோவில்பட்டியில் சர்வதேச ஆக்கி போட்டியை நடத்த தயாராகும் ராஜீவ்காந்தி விளையாட்டு கழகம்
2006 இல் கோவில்பட்டி குப்புசாமி மைதானத்தில் ராஜீவ்காந்தி விளையாட்டு கழகம் நடத்திய அகில இந்திய ஆக்கி போட்டி
கோவில்பட்டி என்றால் ஆக்கி பட்டி என்று கூறும் அளவுக்கு கோவில்பட்டி நகரம் ஆக்கியின் தலைநகரமாக திகழ்கிறது
நூறு ஆண்டு காலமாக ஆக்கி என்பது கோவில்பட்டி மக்களின் வாழ்வில் இணைந்து இருக்கிறது. ஆக்கி என்பது வாழ்வாதாரமாக விளங்கியது. கோவில்பட்டியில் இலக்குமி ஆலை தூத்துக்குடியில் துறைமுகம், மதுரா கோட்ஸ், ஸ்பிக், போன்ற நிறுவனங்களில் ஆக்கி விளையாட்டுக்கு முக்கியத்துவம் தந்து வீரர்களுக்கு வேலைவாய்ப்பு தந்ததால் ஆக்கி விளையாடுவதில் அதிக கவனம் செலுத்தி வேலைவாய்ப்பு பெற்று வந்தனர்

மேலும் கோவில்பட்டி இலக்குமி ஆலை கோடை விடுமுறை காலங்களில் அகில இந்திய அளவிலான ஆக்கி போட்டியை திருவிழா போல் நடத்தியதால் மக்கள் மத்தியில் ஆக்கி விளையாட்டு பிரபலம் அடைந்தது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் வீரர்களின் விளையாட்டால் கோவில்பட்டி மக்கள் கவரப்பட்டனர்.
அவர்களுக்கு ஈடாக விளையாடும் நம்ம ஊர் அணி வீரர்களை , ஆக்கி மைதானத்தில் உற்சாகப்படுத்தி போட்டியாய் கண்டு ரசிப்பதில் தான் எவ்வளவு ஆனந்தம்..?
ஆக்கி விளையாட்டின் தந்தை என அழைக்கப்படும் மேஜர் தயான் சந்த் 1952 காலகட்டங்களில் கோவில்பட்டி வந்து இலக்குமி ஆலை அணியின் வீரர்களுக்கும் கோவில்பட்டி சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கும் ஆக்கி பயிற்சி அளிப்பார்.

பின்னர் சிறந்த வீரர்களை தேர்வு செய்து ஜெர்மன் , ரஷ்யா, பிரான்ஸ், போன்ற நாடுகளுக்கு சிறப்பு அழைப்பாளராக லீக் போட்டிகளில் விளையாட அழைத்துச் செல்லப்பட்டனர். 1980 காலகட்டத்திற்குப் பிறகு கோவில்பட்டி வீரர்கள் கோவிந்தா, ராமசாமி, ஜெகன் செந்தில், ராதாகிருஷ்ணன், சுரேஷ்குமார், அஸ்வின், போன்றோர் இந்திய அணிக்காக விளையாடி பெருமை சேர்த்தார்கள்
கோவில்பட்டியில் அதிக ஆக்கி கிளப்புகள் செயல்பட்டு வருகின்றன குறிப்பாக கோவில்பட்டி ஸ்போர்ட்ஸ் கிளப், நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப், பிலிப்ஸ் ஆக்கி கிளப், யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் , தந்தை ஞானமுத்து ஆக்கி கிளப், இலுப்பையூரணி ஸ்போர்ட்ஸ் கிளப், டாக்டர் அம்பேத்கர் ஆக்கி கிளப், அசோக் நினைவு ஆக்கி கிளப், வீரன் சுந்தரலிங்கம் ஆக்கி கிளப், பாண்டவர்மங்கலம் ஆக்கி கிளப், பாரதி ஆக்கி கிளப், மேலும் லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி, செல்லையா ஆக்கி அகடமி, கோவில்பட்டி ஹாக்கி அகடமி, போன்றவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் 1998 ஆம் ஆண்டு செல்லையா என்பவர் ஏழை எளிய மக்கள் விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் என்ற விதையை விதைத்தார். இன்று 28 ஆண்டுகள் கடந்து ஆக்கி, கால்பந்து , தடகளம், கிரிக்கெட், போன்றவற்றில்வீரர்களை உருவாக்கி விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கோவில்பட்டியில் புரட்சி செய்து வருகிறது.

மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலையும், மாலையும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது தமிழகத்தில் அனைத்து போட்டிகளிலும் விளையாட அழைத்துச் செல்லப்படுகிறார்கள் ஆண்டு தோறும் மே மாதங்களில் மாநில மற்றும் அகில இந்திய அளவிலான ஆக்கி போட்டிகள் நடத்தி கோவில்பட்டிக்கு பெருமை சேர்த்து வருகிறது .
ஆக்கி பயிற்சி அளிப்பது மட்டுமல்லாமல் ஏழ்மையில் உள்ள மாணவர்களுக்கு பள்ளி கட்டணம், கல்லூரி கட்டணம், விளையாட்டு உபகரணங்கள், இலவசமாக வழங்கி வருகிறது. ஆக்கி வீரர்கள் கல்லூரி படிப்பை முடித்த பின்பு வேலைவாய்ப்பு பெற்று தருவதற்காக உடற்கல்வி துறை, ஆக்கி பயிற்சியாளர், ஆக்கி நடுவர்கள் தேர்வு, போன்ற விளையாட்டு துறைக்கு சம்பந்தமான அனைத்து படிப்புகளும் படிப்பதற்கு அனைத்து உதவிகளும் இலவசமாக செய்து தருகிறார்கள்.
ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தில் வீரர்களாக இருந்தவர்கள் தற்போது காவல்துறையில், ராணுவத்தில், உடற்கல்வி ஆசிரியராக, பயிற்சியாளராக, முனைவர் பட்டம் பெற்று உடற் கல்வி இயக்குனர்களாக சாதனை புரிந்து வருகிறார்கள்.
ராஜீவ்காந்தி விளையாட்டுக்கழக ஆக்கி அணி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகிறது 2006 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் சார்பாக கே.என்.சுப்பாராஜ் நினைவு அகில இந்திய ஆக்கி போட்டி இந்தியாவின் சிறந்த மண் மைதானமான ஜி . குப்புசாமி ஆக்கி மைதானத்தில் நடத்தி சாதனை புரிந்தது.
இப்போட்டியில் இந்தியாவில் உள்ள சிறந்த அணியான எம்.இ.ஜி , இ.எம்.இ, ஜே.சி.டி இந்தியன் வங்கி போன்ற அனைத்து அணிகளும் கலந்துகொண்டு சிறப்பு செய்தது.
தொடர்ந்து 2007 ஆம் ஆண்டும் அகில இந்திய ஆக்கி போட்டி நடத்தியது 2008 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் முதல்முறையாக மாநில அளவிலான பெண்கள் ஆக்கி போட்டி நடத்தினார்கள்.
2013 மற்றும் 2014 ஆம் ஆண்டில் கோவில்பட்டியில் முதல்முறையாக பெண்களுக்கான அகில இந்திய ஆக்கி போட்டியை வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்தினார்கள். தொடர்ந்து 28 ஆண்டுகளும் போட்டிகள் நடத்தி தென்னிந்தியாவில் உள்ள அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற்று ஆக்கி விளையாட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளனர்.
தற்போது தினமும் கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 50க்கும் மேற்பட்ட இளம் ஆக்கி வீரர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள் மண் மைதானத்தில் சிறப்பாக விளையாடும் நம் கோவில்பட்டி வீரர்கள் செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் பிரகாசிக்க சற்று தயங்கியதை உணர்ந்த ஜெயலலிதா 2017 ஆம் ஆண்டு முதல் அமைச்சராக இருந்த போது கோவில்பட்டியில் செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தை அமைத்து தந்தார்கள்
அந்த மைதானத்தில் சிறப்பு விளையாட்டு விடுதியும் துவங்கி 30 கல்லூரி மாணவர்கள் தங்கி பயிற்சி பெற்று வந்தார்கள் அந்த சிறப்பு விளையாட்டு விடுதியில் பயின்ற மாணவர்கள் மாரீஸ்வரன், கார்த்தி, சதீஷ் ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடி கோவில்பட்டிக்கு பெருமை சேர்த்தார்கள்

தற்போது அந்த சிறப்பு விளையாட்டு விடுதியில் பயிற்சி பெற்று வரும் வீரர்கள் அனைவரும் தமிழக அணிக்காகவும் இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாமில் தேர்வு பெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ராஜீவ் காந்தி விளையாட்டு கழக கவுரவ தலைவரான முன்னாள் இந்திய ஆக்கி அணி தலைவர் அர்ஜுனா விருது பெற்ற முகமது ரியாஸ் ஆண்டுக்கு இரண்டு முறை இலவச பயிற்சி முகாம் நடத்தி வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தில் தகுதி பெற்ற பயிற்சியாளர்கள் மனநல மருத்துவர் பாலாஜி சர்வதேச வீரர்கள் முகமது ரியாஸ் அஸ்வின் மாரீஸ்வரன் போன்றோர் செயல்படுவது வீரர்கள் வெற்றி பெறுவதற்கு கூடுதல் பலமாக அமைகிறது
ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழக பொறுப்பாளர்கள் குரு சித்திர சண்முக பாரதி , காளிமுத்து பாண்டியராஜா, பாரதி ராஜன், முருகன், வேல்முருகன், முகேஷ், சுரேஷ்குமார், காளிதாஸ், அஸ்வின், தனசேகரன் பொன்ராஜ் வழக்கறிஞர் செல்வக்குமார் ஆகியோர், விளையாட்டு கழக செயல்பாட்டுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

கோவில்பட்டி ஆக்கி வளர்ச்சியில் கே ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே ஆர் அருணாச்சலம் , வேல்ஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் நாகமுத்து, மருத்துவர் ஸ்ரீ வெங்கடேஷ் , சாரா தங்கமாளிகை உரிமையாளர் அப்துல் ஹக்கீம் ஹுசைன், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் நல சங்கத் தலைவர் பரமசிவம் , நகர்மன்ற உறுப்பினர் முத்துராஜன் , திருப்பதி கேஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் சீனிவாசன் , கே.என்.சுப்பாராஜ் கல்வி அறக்கட்டளை தாளாளர் ராமச்சந்திரன், திருமலை ராஜன், போன்றோரின் பங்கு மிக முக்கியமானதாகும்
இன்னும் சில ஆண்டுகளில் கோவில்பட்டியில் சர்வதேச ஆக்கி போட்டியை நடத்துவதற்கு ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் தயாராகி வருகிறது.
அதே சமயம் அதற்கு ஏற்ற வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் கோவில்பட்டிக்கு தேவைப்படுகிறது. தற்போதைய அரசு மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடத்துவதற்கு உரிய வசதிகள் கிடையாது. எனவே அதற்குரிய வசதிகளை அரசு ஏற்படுத்திதரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அப்படி ஒரு மைதானம் அமைந்து கோவில்பட்டியில் இருந்து வெளிநாட்டு ஆக்கி அணிகள் மோதும் போட்டியை காணும் வாய்ப்பு கிடைக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்…!







