சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து ; 7 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் கமலேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.. இந்த ஆலையில் பலரும் வேலை செய்து வருகிறார்கள்.
பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் புகை மூட்டம் பல அடி தூரத்துக்கு எழுந்தது..

இந்த வெடிவிபத்தில் 2 பெண்கள் 3 ஆண்கள் என 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது

தொடர்ந்து அந்த பகுதியில் முகாமிட்டுள்ள தீயணைப்புத் துறையினர் உள்ளே மேலும் யாரேனும் சிக்கி உள்ளனரா என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிவிபத்து சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பட்டாசு ஆலையின் போர்மேன் ஒருவரை கைது செய்துள்ளனர்.







