குடியிருப்பு பகுதியில் அனுமதி பெறாமல் நடக்கும் சிமெண்ட் செங்கல் ஆலை மீது நடவடிக்கை எடுக்ககோரி கோட்டாட்சியரிடம் மனு
கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் சிமெண்ட் செங்கல் ஆலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் ஐந்தாவது தூண் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் ஐந்தாவது தூண் தலைவர் சங்கலிங்கம் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறி இருந்ததாவது :-
கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி ஜெயம் நகரில் கண்மாய் அருகே உரிய அனுமதி பெறாமல் தனியார் சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை சுற்றி 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஆலையின் மூலப் பொருட்களை வைக்க கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி அந்தக் கட்டடத்தின் அருகே அரசின் சார்பில் அமைக்கப்பட்ட சிறிய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அருகே அதிக ஆழம் தோண்டி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதால், அந்த மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கீழும் விழும் நிலையில் இருக்கிறது.
அதுமட்டுமல்லாது செங்கல் ஆலையில் இருந்து வெளியேறும் மாசு காற்றில் பரவுவதால், குடியிருப்புகளில் இருப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அருகில் இருக்கக்கூடிய நீர் நிலையும் பாதிக்கப்படும் நிலை ஏற்படடுள்ளது.

தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் செங்கல்கள் சாலையில் வைக்கப்படும் நிலையில் இருப்பதால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தனர்.
மனுவினை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் மகாலட்சுமி ஏற்கனவே இது தொடர்பாக புகார் வந்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளதது. உரிய அனுமதி பெறவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்
சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினை சேர்ந்த ஓய்வு பெற்ற நில அளவையாளர் குருசாமி, ராஜேஷ் கண்ணா, பரமசிவம், சுதாகரன், சேதுராமன் ஆகியோர் மனு அளித்த போது உடன் இருந்தனர்.







