ராமதாஸ் – செல்வப்பெருந்தகை சந்திப்பு; திமுக கூட்டணியில் பாமக இணையுமா?
பாமகவில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அன்புமணிக்கு நெருக்கமாக இருக்கும் நிர்வாகிகளை ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்குவதும் அவர்கள் மீண்டும் அதே பதவியில் தொடர்வார்கள் என்று அன்புமணி அறிக்கை விடுவதும் கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாமகவின் உட்கட்சி விவகாரம் அந்த கட்சிக்கு பின்னடவை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே பாமக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், தற்போது அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கிறது. பாஜக கூட்டணியில் தொடர்வதற்கு அன்புமணி விருப்பம் காட்டினாலும் அதற்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
பாஜக உடன் கூட்டணி வைத்தது பாமக செய்த தவறு என்று ஏற்கனவே அவர் கூறியியிருந்தார். ராமதாஸை சமாதானப்படுத்த பாஜக தரப்பில் இருந்து தூது சென்ற போதும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸை. திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேரில் சந்தித்தார்.

பூச்செண்டு கொடுத்து 60-வது திருமண நாள் வாழ்த்து தெரிவித்த அவர், நடப்பு அரசியல் நிலவரம் குறித்து உரையாடினார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பாமகவை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம். என்ற தகவலும் வெளியாகி உள்ளது. எனவே திமுக கூட்டணியில் பாமக இணையுமா? என்பது குறித்து இரு தரப்பிலும் உறுதிப்படுத்தவில்லை,.







