கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் மீது கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் , போலீசில் புகார்
கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி மீது கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவராக இருக்கும் க.தமிழரசன் கோவில்பட்டியில் பொது மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள், பொதுநலப் பிரச்சனைகள், அரசு திட்டங்கள் முறையாக லஞ்சலாவன்யங்கள் இல்லாமல் மக்களுக்கு சென்று சேரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி போராட்டங்கள் நடத்துவது, மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறார்.

மேலும் இவர் இந்திய கலாச்சார நட்புறவு கழகம், மற்றும் பல்வேறு தொழில் சங்கங்களுக்கு பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவரை அச்சுறுத்தும் வகையில் நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி மிரட்டல் விடுத்து பேசியதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசனுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறும் புகார் அளிக்கப்பட்டது.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், ஐ.என்.டி.யு.சி. ராஜேந்திரன், மகேந்திரன், காங்கிரஸ் கட்சி செயலாளர் துரைராஜ், மனித நேயம் மக்கள் கட்சி செண்பகராஜ், வழக்கறிஞர் முத்துக்குமார், இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வக்குமார், தொழிலாளர் விடுதலை முன்னணி கலைச்செல்வன், ஈஸ்வரன், சங்கர் ஆகியோர் இந்த புகார் மனுவை அளித்தனர்.







